02

Feb

2024

தன் வரலாறு…

வரலாறு என்பது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்துவது. மனதிற்குள் நினைக்கின்ற மகா வீரர்களை முற்றிலுமாக அறிந்து தானும் அவர் போல் மாற, மலரத்துடிப்பது. எடுத்துக்காட்டாகச் சிலரைச் சொல்லி இருப்பவர்களை சாதிக்க அழைப்பது. காலத்தை வென்றவர்களைக் காலத்தால் அழியாமல் காப்பது.

இந்த வரலாறுகள் பல வகைப்படும். நான் வணங்கும் ஆண்டவனுக்கு ஒரு வரலாறு உண்டு. தன்னை ஆண்ட அரசர்களுக்கும் வரலாறு உண்டு. சமுதாயத்திற்காக வாழ்ந்த தலைவர்களுக்கும் வரலாறு உண்டு. தனக்கென்று ஒரு வரலாறும் வைத்திருக்கிறார்கள், நாட்டுக்கு, மதத்திற்கு, மொழிக்கு, சாதிக்கு என்று பலவற்றிற்கு பலவாறு வரலாறு வகுத்திருக்கிறார்கள்.

இப்போதைய வரலாற்றுப் பாடம் என்றால் அது அரசர்களைக் குறிக்கிறது. பலரைக் கொன்று குவித்தவர்களையும், மக்களின் வரிப்பணத்தில் கோட்டையும், கோயிலையும் கட்டியவர்களையும், மன்னன் என்றும் மாவீரன் என்றும் வரலாறு சொல்கிறது. ஊர்ப் பணத்தையெல்லாம் வரியாய்ப் புடுங்கி உல்லாச வாழ்க்கை வாழ்வதுதான் ராசா என்றால் அதை ஏன் படிக்க வேண்டும்.?

பின்பு நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை வாழ்க்கையின் முன்னோடியாக வைத்து வரலாறு எழுதப்பட்டது. பின்பு பணம் உள்ளவர்கள் முகத்தில் வெளிச்சம் படும் என்பதால் தன்னை உயர்ந்தவர்கள் எனக் கருதியவர்களும் தன்னை உயரமான இடத்தில் வைத்தவர்களும் தனக்கென்று ஒரு வரலாறு தானே எழுதிக் கொண்டார்கள்.

வரலாறு எழுதப்படாவிட்டாலும், வரலாறுகள் வாசிக்கப்படா விட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு. சிலருக்கு அது ஊருக்குள்ளேயே உறங்கிக் கிடக்கிறது. சிலருக்கு அது உலகெங்கும் சிறகடித்துப் பறக்கிறது. படித்துப் பட்டம் பெற்று பணிபுரிவதன் மூலம் பல்வேறு ஊர்களுக்குத் தன் கிளைகளை அது பரப்புகிறது. ஆயினும்; நாம் வாழ்ந்த வாழ்க்கைத்தான் நம் வரலாறு என்றால்? அது எலும்புக் கூட்டிற்குப் பட்டாடை அணிவது போன்று எந்தப் பயனும் அற்றது!. பட்டாடையே என்றாலும் அது பிணத்திற்குப் போத்தினால் என்ன புகழ் இருக்கும்?

உங்கள் வரலாறு என்பது உங்களைச் சுற்றியது அல்ல உங்களைப் பற்றியது. பிறரது வாழ்க்கையில் நீங்கள் வேராக, விழுதாக, உயிராக, உணர்வாக, நினைவாக, நிறைவாக நீங்கள் கலந்திருந்தால் அதுதான் உங்கள் வரலாறு. அடுத்தவர்கள் புத்தகத்தில் நீங்கள் எத்தனை பக்கங்கள். அந்தப் பக்கத்தில் எல்லாம் உங்களது பங்களிப்புகள்! அதுதான் உங்கள் வரலாற்றின் உன்னதம்.

ஒரு தாய்? அவள் மட்டும் இல்லாவிட்டால் அந்த வீடு எப்போதோ மண்ணோடு மண்ணாய்ப் போய் இருக்கும்!. அந்த வீட்டுக்கு அந்தப் பையன்; மாடாய் உழைக்கிறான். என் நண்பன் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு நான் இருந்திருக்கவே மாட்டேன். எனக்குக் கிடைச்சது மனைவி இல்லைங்க அது வரம் என்று பல இடங்களில் நம் காதுகளில் கேட்டு மனதை நெகிழ வைத்த வார்த்தைகள் ஆகும். இதில் பலரது வாழ்க்கையில் பங்கு கொண்டு மங்காத மறையாத சூரியனாய்… வாழ்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே எத்தனையோ அறிவாளிகளை, மேதைகளை, அதிகாரிகளை, மருத்துவர்களை, தலைவர்களை, தியாகிகளை அடையாளம் கண்டு பூமிக்குத் தந்தவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த அரிய பணி. ஆசிரியர்கள் மட்டும் இல்லையென்றால் இங்கு மட்டரக அரசியலில்தான் மானிடம் மகுடம் சூட்டியிருக்கும்.

எனவே நம் வரலாறு என்பது நம் சாதனைகளையும் வேதனைகளையும் நிரப்பிப் புத்தகங்களாக்குவதல்ல. நம்முடைய வீரத்தையும் வெற்றியையும் பதிவு செய்வதல்ல. நாம் செய்த கொடைகளையும் உதவிகளையும் உச்சரிப்பதல்ல! நம்மால் எத்தனைபேர் வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள் என்பதுதான். நமது வரலாறு அள்ளிக் கொடுப்பதில் மட்டும் அடங்கிதல்ல நம் வரலாறு ஆறுதல் கொடுப்பதிலும் அடங்கியிருக்கிறது. உதவி செய்வதில் மட்டுமல்ல உடனிருப்பதிலும் வந்து நிற்கிறது. தட்டிக் கொடுப்பதில் மட்டுமல்ல தட்டிக் கேட்பதிலும் தடம் பதித்திருக்கிறது.

நாம் ஒரு தனித்தீவல்ல. ஒரு குடும்பத்தில் உதித்து வந்தவர்கள். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், உறவுகள் என்று வரும்போது கட்டாயத்தின் பெயரிலும், இரத்தவழி உறவு முறைகளிலும் சில பக்கங்களை நாம் ஆக்கிரமித்து இருப்போம். அதையும் தாண்டி எத்தனைபேருக்கு நாம் உதவி செய்திருப்போம் நான் உங்களுக்குச் செய்தால் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் வீட்டு விசேசங்களுக்கு மாறி மாறி முறைசெய்து கொள்வது அன்புக்காகச் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு யார் யார் என்னென்ன செய்தார்கள்? என்று எண்ணிக் கணக்கு பார்க்கிற கூட்டம் இது. சமுதாயத்திற்குப் பயந்து யாரிடமும் விரும்பினாலும் பேசமாட்டோம்! எதிர்காலத்திற்குப் பயந்து யாருக்கும் இருந்தாலும் கொடுக்க மாட்டோம்! கணவனோடு வாழாதவர்களை வாழாவெட்டி என்பார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல வாழ முடியாதவர்கள் வெட்டியாய் வாழ்பவர்கள் என்று சொல்லலாமா?

எனவே அனைவரும் உங்கள் வரலாற்றை ஒருமுறை நீங்களே புரட்டிப் பாருங்கள். நீங்கள் இல்லாமல் எத்தனைபேருக்கு வரலாறு இல்லை. வாய்ப்புக்குக் கிடைக்கின்ற போதெல்லாம் பிறர் வாழ்க்கையில் உங்கள் வரலாறு பதிவாகி உள்ளதா? நீங்கள் அருகிலிருந்தவர்கள் எத்தனை பேர்? ஆறுதல் சொன்னவர்கள் எத்தனைபேர்? உற்சாகப் படுத்தியவர்கள் எத்தனைபேர்? உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? நெஞ்சைத் தொட்டு நீங்களே சொல்லுங்கள்?

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவி செய்வது! எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொண்டு பிறருக்காக வாழ்வது! யார் தடுத்தாலும் கேளாது பிறரின் உண்மைக்காகப் போராடுவது!. தனக்கு வருகின்ற நலன்களும் பலன்களும் தடைபட்டாலும் பிறரைக் கைவிடாமல் காப்;பது!. தன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்டவர்களைக் கூட வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவது!. நம்மை வாழவே கூடாது என்று நினைத்தவர்களுக்குக் கூட வாழ வழி அமைத்துக் கொடுப்பது!. நம்மைப் பற்றி இல்லாதது பொல்லாதது கூறித்திரிந்தவர்களையும் இல்லாதபோது கொடுத்து உதவுவது! நம்மை அசிங்கப்படுத்தியவர்களை, அவமானப்படுத்தியவர்களை எல்லாம் ஆதரவளிப்பது! ஆறுதலாய் இருப்பது! என வாழ்ந்தால் இதுதான் உங்கள் வெற்றியின் வரலாறு. ஒவ்வொருவரின் வரலாற்றிலும் உங்கள் பெயரே உயர்ந்து நிற்கும்.

இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன செய்தீர்கள்? யாருக்குச் செய்தீர்கள்? அது நல்லதா? கெட்டதா? இனி என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் வரலாற்றைப் பிறர் எவ்வாறு எழுத? உங்களை இச்சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப் போகிறீர்கள்?

ரத்தன் டாடா என்பவர் பணக்காரர்களில் ஒருவர் ஆனால் பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து இடத்தில் அவரது பெயர் இல்லை ஆனால் பலரது இதயங்களில் அவர் பெயர் இருக்கிறது. காரணம் தாங்கள் நிறுவனங்களின் வருமானங்களில் 66% ஏழைகளுக்கும் அனாதை ஆசிரமங்களுக்கும், முதியவர்கள் இல்லத்திற்கும் வாரி வாரி வழங்குகிறார். அவர் ஏழைகளுக்கு வழங்கிய தொகையே உலகப் பணக்காரர்களின் மொத்தத் தொகையைவிட அதிகம். இதில் எந்த வரலாறு உங்களைக் கவர்ந்தது? உலகில் உயர்ந்த பணக்காரன் என்பதா? உலகில் உயர்ந்த குணக்காரர் என்பதா?

பிறருக்குப் பிடித்தமான வரலாறு உங்களில் உருவாகப் பிறருக்குப் பிடித்தமான மனிதராக வாழுங்கள். நீங்கள் வேராய் இருந்து பல விருதுகளை உருவாக்குங்கள். அவைகள் எல்லாம் விருட்சமாகட்டும் அதில் உங்கள் முகமும் தெரியட்டும். உங்கள் பெயர் பொறிக்கட்டும் வாழ்க உங்கள் வரலாறு!

“உறவைக் கடந்து
பிறருக்காக வாழ்ந்தால்
நீ பூமியின் கடவுள்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES