03

Mar

2023

முதியோர் இல்லம்….

முளைக்கக்கூடாத ஒன்று இன்று தளைத்தோங்கி நிற்கிறது. அதுதான் முதியோர் இல்லம். பழம்பெருமை பேசித்திரியும் நாம் நம்பெருமைகளில் ஒன்றாகக் கருதுவது கூட்டுக் குடும்பம் இதில் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழ்ந்து குதுகலித்து வளர்ந்த நாம் எப்போது தனிக்குடித்தனம்? என்ற தவற்றைச் செய்தோம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும் “தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் தவறுகளை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது” என்ற மமதையும் மனதிற்குள் தோன்றியபோது சுயநலமாகச் சிந்தித்தவர்களால் சிதைந்து போனது நமது கூட்டுக்குடும்பக் கலாச்சாரம்.

இதனால் தனக்கு இடையூறாக இருப்பார்கள் என்று பெற்றோர்களையே சுமைகளாக எண்ணிய பிள்ளைகளால் வடிவமைக்கப்பட்டது தான் முதியோர் இல்லம். முதியோர் இல்லத்தைப் பற்றி ஒரு கவிஞன் கூறும்போது “மனிதக் காட்சி சாலைகளைப் பார்க்க சில பால் குடித்த மிருகங்கள் அவ்வப்போது வந்து செல்லும்” என்று தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அவ்வப்போது உதவி செய்கிறேன் என்ற போர்வையில் வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மனிதர்களை மனித மிருகங்கள் என்று குறிப்பிடுகிறார்.

தாத்தா பாட்டி என்ற தலைமுறை வழிகாட்டுபவர்களாகவும், அப்பா-அம்மா வழி நடப்பவர்களாகவும் பிள்ளைகள் வாரிசுகளாகவும் வளர்ந்து வருபவர்களாகவும் வாழையடி வாழையாக வளர்ந்து வரும் கலாச்சாரமும் சமூகமும் தான் நம் சமூகம். நம் சமூகம் எப்போது சரிந்தது? ஏன் கூட்டுக்குடும்பம் பிரிந்தது? என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் மனிதன் சுயநலப் போர்வையில் சுருண்ட பிறகு உறவுகள் சரிவுகளைச் சந்தித்தது. நீ யாரோ? நான் யாரோ? என்ற கருப்புப் பக்கங்களில் நம் பிம்பங்கள் தெரிய ஆரம்பித்தது. இதயம் சுருங்கி சதைகள் தான் சௌகரியமாய் வாழ வழித்தடங்களைத் தேடியது.

திரைகளில் மட்டுமே கூட்டுக் குடும்பமாக வாழும் திரைப்படத்தை கைதட்டி இரசித்துவிட்டு தரையில் அதற்கு திரையிட்டு விட்டோம். வீட்டில் வளரும் அரும்புகளுக்கு தக்கப் பாதுகாப்பு இல்லாமல் சதை தேடும் மனித மிருகங்கள் சின்னக் குழந்தைகளிடம் எல்லை மீறுவதெல்லாம் வீட்டில் பொறுப்பான மனிதர்கள் இல்லாததுதான் என்று இன்னும் பல முட்டாள்களுக்கு தெரியாமல் இருப்பதுதான். வருத்தமாக இருக்கிறது. வளர்த்துவிட்ட பெரியோர்களை வளர்ந்த பிறகு வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற பிறவிக் கடனை அடைக்காமல் பிழை செய்பவர்களே இங்கு அதிகம்.

ஒரு குழந்தை பள்ளிக்கு வருமுன் படிக்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன. அதனைக் கற்றுக் கொடுப்பவர்கள் வீட்டுப் பெரியவர்களே. அவர்கள் தான் மானம், மரியாதை, அன்பு, அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, உதவிசெய்தல் எதனைச் செய்ய வேண்டும்? எதனைச் செய்யக் கூடாது? எதனைத் தொட வேண்டும்? எதனைத் தொடக் கூடாது? எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? என்றெல்லாம் புத்தகமில்லாப் போதனையை புகட்ட வேண்டியவர்கள் பெரியோர்களே! இது தெரியாமல் யாரோடோ எப்படியோ! குழந்தை அனுப்பிவிட்டு குழந்தைக்கு Good Touch, Bad Touch என்று கற்றுக் கொடுப்பது புலிகள் வாழும் அடர்ந்த காட்டுக்குள் சென்று கன்றுக் குட்டியை கட்டி வைத்து விட்டு புலிகளிடமிருந்து தப்பிப்பதற்கு கன்றுக் குட்டியே ஒழிந்துகொள் என்று கதை சொல்வது போலாகும்.

அன்பினாலும் அனுபவத்தினாலும் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடங்களை ஏடெடுத்துக் படித்துவிடும் என்று எப்படி என்ன முடியும்? தாயோடு உறவாட வேண்டிய குழந்தைகளை எல்லாம் இப்போது காசு கொடுத்து பேயோடு பேச அனுப்பியிருக்கிறீர்கள். அவர்கள் கற்றுக் கொடுப்பது என்ன? பேசாதே! சத்தம் போடாதே! அமைதியா இரு! விளையாடாதே! பேசுனா அடிப்பேன்! எழுந்திரிச்சா கிள்ளுவேன்! பக்கத்தில் வந்தால் தள்ளுவேன்! என்பது பிள்ளைகளுக்கு தாம் அமைத்துக் கொடுக்கிற வாழ்வின் சொர்க்கமா! இல்லை வகுப்பறை என்ற நரகமா? யோசித்துப் பார்ப்போம்!

தாயோடு இருந்து அன்பை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் தன் வசதிக்கும் ஆடம்பத்திற்கும் உழைக்க ஆசைப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிற பெற்றோர்களால்தான் இன்று முதியோர் இல்லங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. தாய் தகப்பன் அன்பிலே அனுபவித்து வாழ வேண்டிய பிள்ளைகளுக்கு அன்பே என்னவென்று காண்பிக்காமல் படிப்பே பெரியது எனப் பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்களை அவர்கள் வயதான பிறகு பிள்ளைகள்தான் வைத்துக் காக்க வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்? குழந்தைக்கு பாசம் தேவைப்படும் போது கொண்டுபோய் பாலர் பள்ளியில் விட்டால் உங்களுக்கு அவன் தேவை ஏற்படும் போது முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவதில் என்ன தப்பு? பாலர் பள்ளிப் பெருகப் பெருக முதியோர் இல்லம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பெற்றோர்களே பெரியோர்களே நமது குழந்தைக்கு ஆரம்பக் கல்வியே போதும். அதற்குமுன் எதுவும் வேண்டாம். நமது பாசம் என்னும் பல்கலைகழகத்தில் அது பல பாடங்கள் படித்துக் கொள்ளும் அதற்கு முன் கல்வி என்ற பெயரில் அதற்கு கல்லறை கட்டாதீர்கள். உறவோடு பழக வேண்டிய குழந்தைகள் ஏதோ ஒரு பள்ளியின் வேலையாட்களுக்கு கட்டுப்பட்டு வீணாய்ப் போக வேண்டுமா? அம்மா கொடுக்க வேண்டியதை ஒரு ஆயா கொடுக்க முடியுமா? அப்பா கொடுக்க வேண்டியதை ஒரு ஆசிரியர் கொடுக்க முடியுமா? பிஞ்சிலேயே பழுக்க வைக்க நினைக்கிற பெற்றோர்களே! அது பிஞ்சிலே வெந்து விறகாகிப் போய்விடுகிறது. அது எப்படி விழுதுகள் ஆகும்? தன் குழந்தைகளை பாலர் பள்ளியில் ஆயாவிடமும் ஆசிரியரிடமும் ஒப்படைக்கிற பெற்றோர்கள் உங்களை உங்கள் குழந்தை முதியோர் இல்லத்தில்தான் ஒப்படைத்துவிட்டு வரும். நீங்கள் செய்வதை உங்களுக்கு உங்கள் குழந்தை செய்ய வேண்டாமா? பாசத்தால் வளர்ந்த எந்தக் குழந்தையும் படிப்பில் எப்போதும் குறைந்ததில்லை. ஒரு குழந்தைக்கு பெற்றோர்களே பெரிய ஆசான் என்பதனை மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள்.

“குழந்தையும் தெய்வமும் ஒன்று – அது
நம் வீட்டில் இருப்பது நன்று.”

ARCHIVES