08

Mar

2023

மக(ள்)ர் தினம்….

என்னாளும் கொண்டாட வேண்டிய ஒரு ஜீவனை இன்று மட்டும் கொண்டாடுவதா? எனக் கேள்வி கேட்கலாம் இந்நாள் பெண்களைக் கொண்டாட மறந்தவர்களுக்கு நினைவூட்டவும் கொண்டாட மறுத்தவர்களுக்கு உண்மையை உரைக்கவும் உருவாக்கபட்ட நாள். இந்நாள் இந்தியக் கலாச்சாரம் சரித்திரம் படைத்தது என்றாலும் ஆண் பெண் பேதம் பார்ப்பதில் நாம் சறுக்கிவிட்டோம் ஆணாதிக்கச் சிந்தனையால் ஒரு பக்க உழைப்பை ஊதாசினப்படுத்தி உலகப் பொருளாதாரத்தில் நாம் ஊனமாகக் கிடக்கிறோம். பாதி வளர்ச்சியை நாம் தடுப்பதால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவன்போல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! இல்லை! இல்லை! படுத்துக்கிடக்கிறோம்!.

பெண்களுக்கு என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? என்று பெண்ணை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்த முன்னோர்களை நான் முட்டாள்கள் என்றுதான் சொல்லுவேன். பாரதி போன்றோர்கள் வந்தபின் தான் பாரதப் பெண்கள் வெளியே வரமுடிந்தது. ஐயா வைகுண்ட ராஜா வந்தபிறகுதான் பெண்கள் மேலாடை அணிந்தார்கள். இப்படிப் பல ஆண்கள் தாங்கள் பங்களிப்பை வழங்கிய பின்தான் பெண்கள் சுதந்திரப் பறவைகளாகச் சுடரொளி எழுப்ப முடிந்தது. ஆணாதிக்கச் சமுதாயமே! ஒற்றைக்கால் செருப்பை வைத்து என்ன செய்வது? ஒன்றை மாட்டை வைத்து எப்படி பயணம் தொடர்வது? ஒற்றைக் கண்பார்வையை வைத்து என்ன செய்வது? நமது முரட்டுப் பிடிவாதத்தால் எவ்வளவு காலம் இருளில் மூழ்கி இருக்கிறோம் முட்டாள்களே! விழித்துக் கொண்டீர்களா! இல்லை விழிகளை வித்துவிட்டு இன்னும் வீரவசனம் பேசுகீறிர்களா!

என் இனிய ஆண் சமுதாயமே! மடியிலிருந்து இறக்கி வைத்தவளை ஏறிமிதிப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? நன்றாக எண்ணிப்பாருங்கள் நம் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்த பெண்களை, நம்மை உயிராய் சுமந்த அன்னை, நம் உயிரைச் சுமந்த மனைவி உடன் பயணித்த சகோதரி நம் உயிரில் வந்த மகள் இவர்கள் தானே நம் இதயம் இருப்பதை அன்பு சுரப்பதை அடையாளம் காட்டியவர்கள் இவர்கள்தான் நான் ஏறிக்கொள்ள ஏணியானவர்கள் நான் நடந்து வந்த பாதையானவர்கள். என்னைச் சுமந்து வந்த இதயமானவர்கள் நான் அயர்ந்து வந்தபோது மடியில் தூங்க வைத்த என் அன்னை. நான் சின்னத் தவறு செய்யும்போது மண்டையில் கொட்டிய அக்கா. நான் தடுமாறி நிற்கும் போது என் தலைகோதிய மனைவி. என் தலையிலே பேன் பார்த்துக்கொண்டிருக்கிற என் மகள். இதுதானே நான் கண்ட சொர்க்கம். இதுதானே என் பூமியின் தேவதைகள் ஐயகோ… என் சொர்க்கத்தையே பலநேரம் நான் சூன்யமாக்கியிருக்கிறேனே!

என் அம்மாவிடம் அடம்பிடித்துச் செயித்திருக்கிறோம். என் மனைவியை அடக்க நினைத்துத் தோற்றிருக்கிறேன். என் மகளிடம் ஏனோ அடங்கிபோகி விடுகிறேன். ஆனால் எல்லோரும் இந்தப் பூமியில் மகிழ்ச்சி வரம் தந்த மாதாக்கள். என் மகளைக் கையில் வாங்கி விண்ணை நோக்கி தூக்கி அண்ணாந்து பார்க்கும் போது தான் விண்ணிருந்து வரும் தேவதையை என் கையில் பிடிப்பதுபோல் மெய் சிலிர்த்துப் போகிறேன். என் தேவதை வீட்டுக்கு வந்த போதுதான் என் கோபமெல்லாம் குறைந்து போனது வழியெல்லாம் எத்தனை பெண்கள் அவர்களால் வாழ்ந்திருக்கிறேன் வளர்ந்திருக்கிறேன் ஆனால் வாழ்த்த ஏதோ மறந்திருக்கிறேன்!.

மழையில் நனைந்து ஓடி வரும்போது என் தாய் முந்தானையைத் தூக்கி முகம் துடைத்த போது என் முகம் மறைந்து இருந்தது. ஆனால் என் தாயின் முகம் இன்னும் மறக்காமல் இருக்கிறது. வாழ்க்கையில் தோல்வியில் துவழும்போது அவமானத்தில் குறுக்கும்போது கண்ணில் கருவிழியில் ஒரு துளி விழவா? வேண்டாமா? என விழிபிதுங்கி நிற்கும் போது ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று சொன்ன என் துணைவி மடியில் புதைந்து மனம்விட்டு அழனும் போல் தோன்றியது ஆனால் என் சுமை இறங்கிப்போனது என சோகம் தொலைந்து போனது. ஏனென்றால் அவள் என் கரத்தைப் பிடித்து நின்ற காட்சி துணையாய் நின்றாளா? இல்லை தூணாய் நின்றாளா? தெரியவில்லை ஆனால் ஆயிரம் அன்னைக்குச் சமமாய் நின்றவள் அவள் என் இலவசச் சொர்க்கம், வீடு தேடி வந்த தேவதை என் மகள் பெண் குழந்தை பிறக்கும் வரை ஒவ்வொரு அப்பனும் கர்வமாய்த் தான் இருக்கிறான். ஆனால் மகள் பிறந்த பிறகு அவன் மழலையாகிறான் அவளைச் சுமக்கும் குதிரையாகிறான்.

பாதை முழுக்க எத்தனை பாசங்கள்? பணிசெய்கின்ற இடத்தில் எத்தனை தோழிகள்? சகோதரிகள்! உறவின் உன்னதங்கள்!. சிலர் பழிசொல்லைச் சுமந்துகொண்டும் பாதை காட்டுகிறார்களே! பக்கத்தில் இருந்து நமக்கு வேலை ஆர்வம் ஊட்டுகிறார்களே, அம்மாவாக, அக்காவாக அவதாரம் எடுத்து வந்து ஆறுதல் தருகிறார்களே! ஊரே தடுத்தாலும் தன் பெயரைக் கெடுத்தாலும் இகழ்ந்தாலும் ஏளனமாய் புகழ்ந்தாலும் விட்டுக் கொடுக்காமல் தன் உடன் நிற்கின்ற விந்தைதான் என்ன? ஆம் பெண்களால் அன்பை விட்டுப் பிரியவோ அன்பை விட்டுப் பிரிக்கவோ முடியாது என்று பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டேன் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

நல்லவர்களே! உங்கள் நெஞ்சில் ஒன்றை நிறுத்துங்கள் அடுக்களை என்பது பெண்களுக்குத்தான் என்ற அரிச்சுவடியை எரித்து விடுங்கள் சேர்ந்து சமைப்போம் சேர்ந்து சுவைப்போம். காபி போடுவதற்கு கூட மனைவியை எதிர்பார்க்கிற கணவர்களின் கையை எரிப்போம். சொத்துக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமே! என்ற அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவோம். மகனும் மகளும் வாரிசு என மார்தட்டிச் சொல்லுவோம்.

சாமி வரம் கொடுத்தால் அது வரம் சாமியே வரமாய் வந்தால் வீட்டிற்கு பெண் குழந்தை வரும் உலக இசைக்கு எல்லாம் உருகாத என் உள்ளம் என் குழந்தையின் கொலுசுச் சத்தத்தைக் கேட்டவுடன் கொஞ்ச ஆரம்பித்து விடுகிறது. உங்களுக்குத் தெரியுமா? பல ஆண்களின் கடைசி குடித்த நீர் தன் மகளின் கரத்திலிருந்து வந்த நீராகத்தான் இருக்கும். ஆணின் ஆணவமும், அகங்காரமும், ஆதிக்கமும் கடைசியில் மண் மூடுமுன் மகளின் முகம் பார்த்தபின் தான் தன் கண்மூடுவான். மகள் வரும் வரை அவன் உயிர் மனதிற்கும், தொண்டைக்கும் இடையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் போன பின் ஏ அப்பா என்று மகள் சத்தமிட்டுக் கதறுவாளே! அந்தச் சத்தத்தை மட்டும்தான் எல்லா அப்பாக்களாலும் கேட்க முடியாமலே போய்விடுகிறது. அப்போது மட்டும் தான் அப்பாக்கள் மகள்களின் அழுகையைத் துடைக்க முடியாமல் மரணித்துக் கிடக்கிறார்கள் கடைசி முகம் பார்க்கும் போது அவள் கதறிக் கொண்டு நிற்பாளே அப்போது மட்டும் தான் அப்பாக்களால் மகளின் அழுகை தடுக்க முடியாது. இருந்தால் அவளை அழ விட்டிருப்பேனா? என்று விண்ணிலிருந்து வேதனைப்படும் அப்பாக்களே! மண்ணில் இருக்கும் உங்கள் மகனிடம் சொல்லுங்கள் உயிரோடு இருக்கும் வரை பெண்களை உயிராய் நினையிங்கள் என்று…

“பெண்களை மதிக்காத நாடு
வரைபடத்தில் கூட வாழாது
பெண்களை மதிக்காத வீடு
பேய்கள் நிறைந்த சுடுகாடு”

ARCHIVES