20

Oct

2023

விசச் செடிகளை விதைத்தது யார்?…

நான் சின்ன வயதில் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது புத்தகத்தில் உள்ள படக்கதையை எனது ஆசிரியர் விளக்கிச் சொல்லிக் கொடுத்தார். ஒரு சிங்கம், நான்கு எருதுகள். சிங்கம் நான்கு எருதுகளை வேட்டையாட வரும்போது நான்கு எருதுகளும் ஒன்றாக நின்று போரிட்டுச் சிங்கத்தைத் துரத்தி விடும். விசமத்தனமான சிங்கம் அந்த எருதுகளை வேட்டையாட நரியின் தந்திரத்தைப் பயன்படுத்தி எருதுகளைப் பிரித்து விடும். பின்பு தனியாக இருக்கும் எருதுகளை வேட்டையாடும். இது அறநெறிக் கதை. இதன் பொருள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் நாம் அனைவரும் வீழ்ந்து விடுவோம் என்பதே!

ஆனால் அப்போது கதையை இரசித்தோம் அதன் பொருள் புரியவில்லை. வகுப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க இந்தக் கதையைச் சொன்னதாக உணர்ந்தோம். ஆனால் இப்போது புரிகிறது பல்வேறு வகுப்புகளாக (சாதிகளாக)ப் பிரிந்து கிடக்கிற நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் நம்மை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். சிங்கம் செயித்துக் கொண்டே இருக்கிறது. எருதுகள் முட்டிக் கொண்டே இருக்கிறது. சிங்கம் சிரமமில்லாமல் இரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறது. சிங்கம் இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த நரியைப் பயன்படுத்தி அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பின்பு மேல்நிலை வகுப்பினைப் படிக்கும் போது மனிதர்களை அவர்கள் வாழ்ந்த நிலத்தின் அடிப்படையில்; பிரித்ததாகத் தமிழ் ஆசிரியர் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் படம்பிடித்துக் காட்டினார். நிலங்களாக அவர் சொன்னது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதில் பாலை நிலத்தில் மக்கள் வாழ்வதில்லை. மற்ற நான்கு நிலங்களிலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

குறிஞ்சி நிலம் மலைப்பகுதி அங்கு குறவர்கள் வாழ்ந்தார்கள். முல்லை நிலம் காட்டுப்பகுதி அங்கு ஆடு மாடு மேய்க்கின்ற இடையர்கள் வாழ்ந்தார்கள். மருத நிலம் வயல் பகுதி அங்கு பள்ளமான பகுதிகளில் விவசாயம் செய்யும் பள்ளர்கள் வாழ்ந்தார்கள். நெய்தல் கடல்பகுதி இங்கு மீன் பிடிக்கும் தொழிலைச் செய்யும் பரதவர்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவையான அதாவது உணவு, உறைவிடம், மருந்து, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் அவர்கள் மலையிலிருந்தும், காடுகளிலிருந்தும், வயல்களிலிருந்தும், கடல்களிலிருந்தும் பெற்றுக் கொண்டார்கள். அதனை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். யார் யாருக்கு எது? எது? தேவையோ! அதனைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.

மேலும் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய, அவர்களுக்குள் சில தொழில்களைச் செய்ய, அவர்களே அவர்களுக்குள் சிலரை உருவாக்கினார்கள். அது மன்னன், தலைவர்கள் கருத்துக்களைப் பறையடித்து அறிவிப்பவர்கள் பறையர்கள். மேலும் முடித்திருத்துபவர்கள், துணித்துவைப்பவர்கள், தோல் வேலை செய்பவர்கள் என தேவைக்குத் தகுந்தபடி வைத்துக் கொண்டார்களே தவிர யாரையும் தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கவில்லை. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

இச்சமயத்தில்தான் கணவாய்கள் வழியாக வந்தவர்கள் நம்மவர்களைப்போல் உழைக்க முடியவில்லை. ஆனால் அத்தனை செல்வங்களையும் அனுபவிக்க நினைத்தார்கள். இங்கு அத்தனைபேரும் உழைப்பாளிகள் இவர்களிடம் எதையும் பறிக்க முடியாது! ஆனால் ஏமாற்றி விடலாம்! என எண்ணினார்கள். அதற்கு முதலில் இவர்களைப் பிரிக்க வேண்டும், அவர்களை அடிமையாக்க வேண்டும். அடிமையாக்கி அவர்கள் பொருள்களை அபகரிக்க வேண்டும். சிங்கம் சிறப்பான திட்டங்களைத் தீட்டியது. அதற்கு ஒரு நரித்தந்திரம் செய்தது. மனிதன் இயற்கையைக் கண்டு பயந்தான், இடி, மின்னல், வெள்ளம், பூகம்பம், நோய்கள் என பல அவனைப் பயங்காட்டியது. எனவே மனிதனைப் பயங்காட்ட இயற்கைக்கு மேல் ஒன்றைப் படைக்க வேண்டும் என நினைத்தான். அதனால் இறைவனைப் படைத்தான் அவன் நம்மைத் தண்டிப்பான், கண்ணைக்குத்துவான் என்றார்கள் இதனால் அவர்களும் பயந்தார்கள். பரிகாரம் தேட முனைந்தார்கள்.

இதனைச் சரியாகப் பயன்படுத்திய ஆரியர்கள், நம்மைப் பிரிக்க அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இறைவனில் பிறந்தவன் அதில் தலையிலிருந்து பிறந்தவன் நாங்கள் எனச் சொல்லி நம்பவைத்தார்கள். இதனை நம்ப மறுத்துவிடுவார்களோ எனப்பயந்து பலம் உள்ளவர்களைப் பார்த்து நீங்கள் தோளில் பிறந்தவர்கள் எங்களுக்கு அடுத்து நீங்கள் தான். நீங்கள் சத்ரீயன் எனச் சொல்லி அவனை அடிமையாக்கி அவன் மூலமாக மற்றவர்களை அடிமையாக்கினார்கள். உணவு, உடைக்குத் தேவையான பண்டமாற்று வணிகர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுவந்தார்கள்.

அடிப்படை வேலைகளைச் செய்தவர்களைச் சூத்திரர்கள் எனச் சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். சூத்திரர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தோல் பொருட்களைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்பவர்கள் அவர்கள் அந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கும்போது உணவுப் பொருட்களை தொட வேண்டாம். அதில் அந்த வாசனை வரும் என்பதற்காக அடுத்தவர்கள் உணவு, தண்ணீர் எடுத்துக் கொடுப்பார்கள். அவர்கள் பயன்படுத்துவார்கள் என இருந்தது.

இப்படித் தொழிலின் காரணமாகத் தொட வேண்டாம் என்று சொன்னதை அவர்களைத் தொட வேண்டாம், தொட்டால் தீட்டு என்று இந்த அயோக்கியர்கள், மாற்றிவிட்டார்கள். அவ்வாறு சிங்கம் திட்டமிட்டு மாடுகளைப் பிரித்ததுபோல் இவர்கள் மனிதனை முட்டவிட்டு பிரித்து விட்டார்கள். நரியைப் பயன்படுத்தியது போல மதத்தைப் பயன்படுத்தி இவர்களைப் பயமுறுத்தி விட்டார்கள். இப்போதும் வட இந்தியாவில் கூட சர்மா, வர்மா, பூபதி, தாசன் என்ற பிரிவினையை வளர்த்து பிளவுபடுத்தியிருக்கிறார்கள்.

மலையிலிருந்து மாணிக்கம் கிடைக்கிறது. கடலிலிருந்து முத்து கிடைக்கிறது. நிலத்திலிருந்து பொன் கிடைக்கிறது. காடுகளிலிருந்து பவளம் கிடைக்கிறது. இது எல்லாம் விலையேறப் பெற்றது தானே! இதில் மேல் எது? கீழ் எது? இந்த நால்வகை நிலத்தை ஆள்பவர்களை ஆரிய வம்சம் அடிமைப்படுத்த அவர்களிடம் இருந்த இப்பொருளை கோயிலுக்குத் தருமாறு ஆண்டவனைச் சொல்லி அடக்கி சாத்திரங்களைச் சொல்லி மடக்கி தனக்கெனத் தக்க வைத்து உழைக்காமல் உண்டார்கள். நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொன்னார்கள். இதனையெல்லாம் பாரதி பாடலில் அவர்களது பகல் வேசங்களைத் தோல் உரித்தார். அவரது பாடலைக் கேளுங்கள் உங்களுக்கு நன்கு புரியும்.

இவை இப்படி இருக்க எல்லோரும் முட்டாளாய் இருக்கிறோமே! என்பதுதான் வேதனை. நமக்குக் கீழ் இருக்கிற சாதியிடம் வீரத்தை காட்டுகிறோமே! தவிர நம்மை அடிமைப்படுத்துகிறவனிடம் இதுவரை நாம் மோதியதில்லை. கேள்வி கேட்டதுமில்லை. கீழ் சாதி என்று மட்டம் தட்டியவர்கள் எழுந்து வரும்போது அவனை நசுக்க நினைக்காதே. அவனோடு சேர்ந்து கொண்டு உன்னை அடிமைப்படுத்தியவனை உடைத்து எறி உழைக்காமல் உண்பவனைத் துடைத்தெறி.

இது புதிய புரட்சி அல்ல பாரதி சொன்ன பழைய புரட்சிதான். “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்றான். காஞ்சியில் ஒரு தாழ்ந்தவனை அழைத்து எல்லோரும் அர்ச்சகர் என்று வீதியில் முழங்கினான். தமிழ்நாட்டில் நாம் பெயருக்குப் பின்னால் இருந்த சாதியை எல்லாம் எடுத்துவிட்டோம். ஆனால் மனதில் இருக்கும் சாதியை மரம்போல் வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது அது மலைபோல் உயர்ந்து நிற்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்று சொல்கிறவர்கள் ஏன்? அதோடு சேர்த்து ஒரே சாதி என்று முழங்கிவிட வேண்டியதுதானே!?. அப்படிக் கூறிவிட்டால் அந்தணன் என்றும் அம்பேத்கார் என்று வேறுபாடு வராதல்லவா? ஆகவே சாதியைத் தவிர்ப்போம். சமத்துவம் வளர்ப்போம் சாதியைப் பற்றிப் பேசுகிற வாயில் எல்லாம் தீயினைத் திணிப்போம். சாதியைப் பார்த்து ஓட்டுப் போடுகின்ற கரங்களை எல்லாம் கடும் தண்டனை கொடுப்போம். தேசியத் தலைவர்களை எல்லாம் சாதித் தலைவர்களிடமிருந்து பறித்து வருங்காலத் தலைமுறைக்கு வாசிக்கக் கொடுப்போம். சாதியைப் பற்றிப் பேசுகிற எல்லோரையும் செத்த சவம் என எண்ணுவோம். சமத்துவம் அமைப்போம்! சாதியைப் புதைப்போம்!

“சிங்கம் எப்போதும்
தனியாய் நிற்கும்
பன்றிகள் எப்போதும்
கூட்டமாய் சுற்றும்”

ARCHIVES