18

Feb

2022

ஹிஜாப்….

பைத்தியக்காரன் ஒருவன் ரோட்டின் மீது நடந்து வந்தால் எப்போது கல்லைக் கொண்டு எறிவான்? என யாருக்கும் தெரியாது வெறிநாய் ஒன்று எதிரே வந்தால் யாரை எப்போது கடிக்கும்? என யாருக்கும் தெரியாது! எனவே எப்போதும் ஒருவிதப் பயத்துடனே பயணம் செய்வோம். அப்படி ஒரு நிலைமை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்று தெரியாமல் இருக்கிறது. ஆனால் சிலரின் முட்டாள் தனமான செயல்களினால் பொது வாழ்வு முடங்கிப் போகிறது பொது அமைதி முடமாக்கப்படுகிறது.

அப்படி ஒரு செயல் நமக்கு ஆடைவடிவில் அருகிலுள்ள மாநிலமான கர்நாடகாவில் நடந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் ஊடகங்கள் வழியாகத் தலைகுனிய வைத்துள்ளது. அங்குள்ள உடுப்பி மாவட்டத்தில் டிசம்பர் 27-ல் புர்கா அணிந்து சென்ற மாணவிகளை பள்ளி நிர்வாகமும், அங்கிருந்தவர்களும் பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளார்கள். இது எவ்வளவு பெரிய கேவலம் என்று அவர்களுக்குத் தெரியாமல் இந்த அராஜகத்தைச் செய்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி -8 ல் மாண்டியா மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் புர்கா அணிந்து தனது ஒப்படைப்பினை ஒப்படைக்க வந்த முஸ்கான் என்ற மாணவியை மாணவர்கள் மறித்து ஜெய்ஸ்ரீராம் என்று கத்த அந்த மாணவியோ துணிந்து அல்லாஹ் அக்பர் என முழங்க கல்லூரி களங்கமாகி காட்டு மிராண்டிகளின் கூடாரமானது நிச்சயம் அவர்கள் மாணவர்களாக இருக்க மாட்டார்கள், ஏனென்றால் மாணவர்கள் இத்தகைய மடத்தனத்தைச் செய்ய மாட்டார்கள். மாணவர்கள் என்ற போர்வையில் யாராலோ ஏவப்பட்ட கூலி நாய்களாக இருக்கும் அதுதான் குறைத்துவிட்டுப் போய் இருக்கிறது.

மானிடம் தோன்றி மகத்துவம் இல்லாது மனம் போன போக்கில் வாழ்வைக் கடந்து கொண்டிருந்த காட்டுமிராண்டி வாழ்க்கையை கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்வதற்குக் கல்வி அவசியம். எனவே கட்டாயம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என தொலைந்து போன மானிடத்தை தேடி எடுக்கும் வரமாக வந்தது தான் கல்வி. ஆனால் இன்று கல்வி எனும் சரஸ்வதியைக் களங்கப்படுத்த கடவுளைத் தூக்கி நிறுத்துகிறேன் என்ற பெயரில் உள் நுழைந்த கயவர்கள் நஞ்சை விதைக்கும் நாற்றங்காலாகக் கல்விக்கூடத்தைப் பயன்படுத்துவதைத்தான் காணச்சகிக்கவில்லை.

எப்போதும் முஸ்லீம் சகோதரிகள் மாணவிகளாக, அலுவலகப் பணியாளர்களாக வெளியே வரும்போது புர்கா, ஹிஜாப் அணிந்து கொண்டு வருவார்கள். உடனே மாணவர்கள் அனைவரும் காவியை அணிந்து கொண்டு வந்தார்கள். இது அடுத்தவர்களைப் தடுப்பதற்காக வந்தவர்கள் அடுத்தவர்கள் செய்வது போல செய்வதுதான் உன் அறிவா? சுய புத்தி இல்லாத சுத்தக் கிறுக்கன்களா? ஒரு மதத்துக்காரர்கள் ஒன்று செய்தால் இத்தேசத்திற்குப் பன்மடங்கு பலன் கொடுக்கும் செயலை அடுத்த மதத்துக்காரர்கள் செய்யுங்கள் அவற்றைத் தடுப்பவர்கள் மதவாதிகள் அல்ல மதம் பிடித்த கோமாளிகள்.

இதனைப் பற்றிய கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது அரசு தரப்பால் வாதாடிய வக்கீல் கூறினார். நான் ஒரு பிராமணன் நான் கிறிஸ்தவப் பள்ளியில் தான் படித்தேன். நாமம் இட்டுத்தான் பள்ளிக்குச் செல்வேன் இதுவரை எந்த நிர்வாகமும் என் நாமத்தை அழிக்கச் சொல்லவில்லை. இப்போது என் பையனும் அப்படியே! என்று இந்திய நாடு எவ்வளவு சகிப்புத் தன்மையோடும் சகோதரப் பாசத்தோடும் பழகிக் கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார் இதில் ஏன் சகதியைக் கொண்டு எறிகிறீர்கள்? மனித நேயத்திற்குச் சமாதிகட்டுகிறீர்கள்?

இந்தியா இந்துக்கள் நிறைந்த நாடு இங்கு இந்துக்கள் சகிப்புத் தன்மையும் சகோதர வாஞ்சையும் உள்ளவர்களாகத் திகழ்கின்ற காரணத்தால் தான் பிற மதத்துக்காரர்களும் பாசத்தோடு பயணிக்கிறார்கள். இந்திய தேசத்தின் மேன்மையும், இறையாண்மையும் உலக நாடுகளில் உச்சத்தில் இருந்தது. ஆனால் சுயநலவாதிகள் தாங்கள் சொந்த நலனுக்காக இந்தியாவைக் குறுக்கு வழியால் பிடித்துக் கோலோச்ச மதத்தை ஆயுதமாக எடுத்து உணர்ச்சியுள்ள அப்பாவிகளை உசுப்பேற்றி அவர்களை எறியவிட்டு இவர்கள் குளிர்காயும் அவலநிலையில் இன்று இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஆயுதமே அடுத்தவர்களைக் குறை சொல்வதுதான் தன்னிடம் உள்ள நிறைகளைச் சொல்லித்தான் பெருமைப்பட வேண்டும். தன்னிடம் குறைகள் அதிகமாக இருக்கும்போது அடுத்தவர்கள் நல்லதும் குறையாகவே தான் தெரியும் குப்பைத் தொட்டியில் இருந்து வேறேன்ன கொண்டுவர முடியும்?

ஒரு மேதாவி சொல்கிறார் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவது அடிமைத்தனம் அதனைப் போக்கவே நாங்கள் இந்த ஆயுதத்தை எடுத்துள்ளோம் என்கிறார் அப்படியென்றால் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்றமே அனுமதி கொடுத்த பிறகும் தடுக்கிறார்களே அதற்குக்குரல் கொடுக்கவில்லையே எத்தனையோ இந்து பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை துச்சாதனம் போல் துகிலுறிந்தார்களே. அப்போதெல்லாம் குரல் கொடுக்காமல் தூங்கிப் போனீர்களா? அல்லது எங்கள் வீட்டில் எல்லா அசிங்கமும் நடைபெற்றாலும் எதிர் வீட்டைச் சுத்தம் செய்வதுதான் எங்கள் கடமை எனச் சொல்லும் மடையர்களா?

இலக்கியத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவன் பேகன் அவன் மனைவியின் பெயர் கண்ணகி. அவளோ கணவனின் அன்புக்கு ஏங்கிக்கிடக்க அவன் மயிலுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு இருந்தான் வீட்டு மயில் வாடிக்கிடக்க காட்டு மயிலுக்குப் போர்வை போர்த்தும் நீ என்ன மடையனா? எனப் புலவர்கள் வெகுண்டெழுந்தார்கள் மன்னனும் மனம் மாறினார். ஆனால் இன்று ஊடகங்கள் இவர்களைக் கழுவிக் கழுவி ஊற்றினாலும் காது கேட்காத ஊனமுற்றவர்களாக மரியாதை கெட்ட மானங் கெட்டவர்களாக வாழ்கிறார்ளே! மற்றவர்களைக் காயப்படுத்த மதம் தானா கிடைத்தது?

இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்தார்கள் மற்றவர்களின் வருகையினால் சிலர் மதம் மாறினார்கள் இருப்பினும் அவர்களையும் இருப்பவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள் சிலர் முஸ்லீம் ஆனார்கள் சிலர் கிறிஸ்துவர்கள் ஆனார்கள் அவர்கள் மதம் தான் மாறினார்களே தவிர மச்சான், மாமன் என்ற உறவு முறையில் இருந்து மாறவேயில்லை. கோயில்கள் அத்தனையும் கூம்பிட்டார்கள் விழாக்கள் அத்தனையிலும் வேறுபாடு இல்லாமல் கலந்து கொண்டார்கள் எல்லார் தோள்களிலும் எல்லாத் தெய்வமும் தேரில் ஏறி வீதிக்கு வந்தது அம்மன் கோவிலில் வெட்டிய கிடாக்கறியை அந்தோணிச்சாமியும் அல்லாவும் சாப்பிட்டுச் சென்றார்கள் எல்லா உண்டியல்களிலும் எல்லாக் காசுகளும் விழுந்தன. திருமணத்திற்குப் பின் மதம் மாறினாலும் அவர்கள் திரும்பி வரும்போது பிறந்த மதத்தின் கதவு திறந்தே இருந்தது குடும்பம் ஒரு மதமும் குழந்தைகள் ஒரு மதமும் இருந்தாலும் கூடி மகிழ்ந்து கொஞ்சிக் குழவினார்கள். இதனால்தான் இந்தியா சகிப்புத்தன்மை நாடானது இந்துக்கள் உலக அளவில் உன்னதமானவர்கள், உத்தமர்கள் என்று உயர்ந்து நின்றார்கள். அவர்கள் தான் உண்மையான இந்துக்கள் இப்போது இந்திய நாடு சுடுகாடாக மாறக் காரணமாய் இருப்பவர்கள் இந்துக்கள் அல்ல, இறையாண்மையைக் கெடுக்க வந்த ஏதோ ஜந்துக்கள் இந்துக்களே அவர்களை மன்னியுங்கள். நாம் என்றும் சகோதரர்களாய் இருப்போம்.

“மனிதர்களில் மனிதம் தேடுவது வைத்தியம்
மனிதர்களில் மதத்தைத் தேடுவது பைத்தியம்”

ARCHIVES