30

Sep

2022

மீண்டும்…குரங்காகி…

நினைத்ததை முடிக்க வேண்டிய இடங்களுக்கு மனிதன் சென்று வந்தான் அது பாதையானது. பின்பு மனிதன் தன்னை வேகப்படுத்திக்கொள்ள பயணத்தை அதிகரித்தான். பயணம் அதிகரிக்க அதிகரிக்க பாதைகள் விரிவானது, நேரானது ஆனால் இப்போது பாதைகளில் பயணிப்பவன் பாதை மறந்து பயணம் துறந்து போதைப் பொருளில் புத்தி கெட்டுப் பொழுதைக் கழிக்கிறான். மனிதர்கள் இதற்கு அடிமையானார்கள் இன்று பாரபட்சமின்றி குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள் எனப் பாகுபாடின்றி அதில் மூழ்கிப் பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய சேட்டைகளைச் சில நேரங்களில் Whatsappல் பார்க்கும்போது அப்படியே குரங்குச் சேட்டைகளைப் பார்ப்பது போல இருக்கும் இதனைப் பார்க்கும் போது மனிதன் மீண்டும் குரங்காகிறானோ? என எண்ணத் தோன்றிவிட்டது. மனிதன் பிறப்புப் பற்றி பல்வேறு இதிகாசங்கள் பல்வேறு ஆய்வுகள் குரங்கின் பரிணாம வளர்ச்சியே மனிதன் என்று அறிவியல் உலகம் நம்புகிறது. ஆனால் இதிகாசங்கள் பலவும், பல விதங்களில் மனிதன் பிறப்பினைப் பற்றிப் பேசுகிறது. இந்து புராணங்களில் ஒரு செல் உயிரினமாக உருவாகி ஒவ்வொரு உருவமாக மாறி இறுதியில் மனித அவதாரமாகக் காட்டுகிறார்கள். விவிலியத்தில் கடவுள் களிமண்ணால் மனிதனைச் செய்து தன் ஆவியை ஊதி அவனுக்குத் தன் சாயலைத்தந்து உலவ விட்டதாக விவிலியம் கூறுகிறது. ஆனால் வளர்ந்து வரும் மாறிவரும் அறிவியல் உலகமோ மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதனை டார்வின் கொள்கை கூறுகின்றது.

ஆனால் நாளடைவில் பார்க்கும்போது அது நம் மூதாதையராகத் தான் இருந்திருக்குமோ? என்று தோன்றுகிறது. நாம் சேட்டை பண்ணும்போது குரங்குச் சேட்டை பண்ணுரான் என்பார்கள். அது சில வேலைகளைச் செய்யும்போது நம்மைப் போலவே அதுவும் செய்கிறது எண்ணும்போது இதுதான் இன்றையக் காலக்கட்டத்தில் குரங்கும், மனிதனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக மானிடச் சமூகம் கூறுகின்றது.

மனிதன் மற்ற உயிர்களிடத்திலிருந்து வேறுபட்டு நிற்பது அவனது பகுத்தறிவினால்தான். பகுத்தறிவினால்தான் பல முன்னேற்றங்களைக் கண்டான். பகுத்தறிவு அவனிடத்தில் நிதானத்தைத் தந்தது. சிந்தித்து செயல்பட வைத்தது. நல்லது இது கெட்டது இது எனக் கண்டறிந்து செயல்பட வைத்தது. பெரியோர் சிறியோர் எனப் பாகுபடுத்தி மரியாதையோடு நடந்து கொள்ள முடிந்தது. உதவ முடிந்தது உற்சாகமூட்ட முடிந்தது உடனிருந்து ஒத்துழைக்க முடிந்தது. இதனால் தான் இறைவனின் படைப்புகளில் மனிதன் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டான். ஆனால் காலம் மாறியது கண்டுபிடிப்புகள் பெருகியது. நாகரீகம் நகர்ந்தது நல்ல செயல்கள் அரங்கேறியது. மனிதனுக்கு ஓய்வு கிடைத்தது. ஓய்வு நேரத்தைச் செலவழிக்கக் களியாட்டங்களில் கவனத்தைச் செலுத்தினான் ஆடினான், பாடினான், ஓடினான், வேட்டையாடினான் விளையாட்டில் ஜல்லிக்கட்டு, அம்பு எய்தல் உறி அடித்தல் என்று பலவிதங்களில் தனது வித்தைகளைக் காட்டினான்.

இப்படி நாட்களைக் கடத்திவந்த மனிதன் உற்சாகத்திற்காக உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தான். அது அவனுக்குத் தனி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. இதற்காக அவன் கள்ளு, புகை, கஞ்சா என்று பயன்படுத்த ஆரம்பித்தான். இவைத் தொடக்கத்தில் ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் நடந்தது. ஒருவேளை தெரிந்தால் ஊர்க் கூடித் தண்டனைக் கொடுப்பார்கள். அதுவும் நடந்தது.

காலம் மாறிக்கொண்டு வந்தது கள்ளுக்கடை அடைக்கப்பட்டது. கவர்மெண்ட் கடை திறக்கப்பட்டது. அரசுக்கு வருமானம் வரவேண்டும் என்ற நோக்கோடு எவ்வித கட்டுப்பாடும் இன்றி இவை காட்டாற்று வெள்ளம்போல் திறந்துவிடப்பட்டது. கடைகள் ஊருக்குள் வர ஆரம்பித்தபிறகு குடிப்பவர்கள் மத்தியில் நன்றாகவே வளர்ந்தது, மலர்ந்தது பிறகு வீட்டுக்ளுக்குள்ளும் அவை விளக்கேற்ற ஆரம்பித்தது. குடிப்பவர் சமூகக் குடிகாரர்கள் என்று சங்கடம் இல்லாமல் தன்னை அறிவித்துக் கொண்டார்கள்.

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்பதுபோல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிக்க ஆரம்பித்தார்கள். கேட்டால் பொறுப்பான வேலையில் இருப்பவர்கள், பெரிய மனிதர்கள் குடிப்பதற்கு மன அழுத்தத்தை(Tension) போக்கக் குடிக்கிறேன் என்றார்கள். ஆசிரியர்கள் குடிக்க ஆரம்பித்த போதுதான் மாணவச் சமுதாயம் தடுமாற ஆரம்பித்தது. குடும்பத்தலைவன் குடிக்க ஆரம்பித்தபோது குடும்பம் தெருவிற்கு வர ஆரம்பித்தது.

மரத்திற்கு மரம் தாவி, நினைத்த கனிகளைப் பறித்துத் தின்று சுதந்திரமாகத் திரிந்த குரங்கு சுற்றுலாப் பயணிகளிடம் பிச்சையெடுத்து தின்ன ஆரம்பித்தபிறகு மரத்தை மறந்தது தன் தரத்தை இழந்தது பிச்சையெடுப்பதையே பெரிதாக நினைத்தது பிச்சை கிடைக்காத போது பிடுங்கித் தின்ன ஆரம்பித்தது. அதுபோலதான் மனிதனும் குடியினாலும் போதையினாலும் புத்தியை இழந்தான். கள்ளாட்டம் ஆடியவன் காம ஆட்டம் ஆட ஆரம்பித்தான். அப்போது கிடைத்த பூ, பிஞ்சு என்று பார்க்காமல் அத்தனையும் கசக்கினான், அசிங்கப்பட்டான். போதைகளில் புதிது புதிதாகக் கண்டுபிடித்து கள்ளுண்ட குரங்குபோல தன்னை மறந்தான் தன்னை இழந்தான் தரங்கெட்டுப் போனான். மனித மாண்பிழந்து மதியிழந்து, மனிதநேயம் இழந்து மனிதன் மட்டும் வாழுவது இதயமில்லா எழும்புக் கூடுகள் எங்கும் நடமாடுவது போல் இப்போதை யாரையும் விட்டு வைக்கவில்லை. மனிதன் குடித்தான் என்ற காலம் மாறிப்போய் இப்போது மது மனிதனைக் குடித்துக்கொண்டு இருக்கிறது. அரசு கொடுத்த இலவசமெல்லாம் எங்கோ வட்டிக் கடையில் இருக்கிறது. எங்கள் உடமையெல்லாம் பணக்காரர்களிடத்தில் இருக்கிறது. என் தந்தை கடனை அடைக்க முடியாமல் ஜெயிலில் இருக்கிறார்கள். அம்மா அடிமையாக இருக்கிறாள். இன்னும் கடையை அடைக்கா விட்டால்? சங்கடப்படாமல் எங்களுக்கும் சவக்குழியையும் திறந்து விடுங்கள்.

“குடியை விற்பனை செய்பவர்கள்
குடும்பத்தின் இரத்தத்தினை உறிஞ்சுகிறார்கள்”

ARCHIVES