10

Oct

2022

என் இளைய தலைமுறைக்கு…

சமீப காலமாக சில நாளிதழ் செய்திகள் சிந்தையைச் சிதைக்கின்றன. செய்திகளைப் பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி இதயத்தை ஊனமாக்கி கண்களை ரணமாக்கி மனது மௌனமாகவே அழுது கொண்டிருக்கிறது. எங்கும் தற்கொலை! எதற்கெடுத்தாலும் தற்கொலை! அதுவும் இளசுகளின் தற்கொலை இரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது. எதற்கு இந்தத் தற்கொலை? என்று எண்ணிப்பாருங்கள். உப்புச் சப்பு இல்லாத பிரச்சனைகளுக்கு உயிரை விடுவது ஒரு தீர்ப்பாகுமா? அல்லது உயிரை விடுவது மட்டும்தான் தீர்வாகுமா?. ஒரு நிமிடம் சிந்திக்க மறப்பது மறுப்பது உயிரை விடத் துணிச்சலை தருகிறது.

எம்.டெக் படிக்கச் சொன்னதால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். செல்லில் விளையாடுவதைக் கண்டித்ததனால் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், வியாபாரத்தில் தோல்வி அடைந்ததால், கடன் தொல்லையால், ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால், காதல் தோல்வியால், தேர்வுத் தோல்வியால் எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. தவற்றை மறைப்பதற்கும், மறப்பதற்கும், தவற்றிலிருந்து தப்பிப்பதற்கும் தற்கொலை தீர்வாகுமா? அதனை தடுக்கவே முடியாதா?

சமூக வலைத்தளங்களில் புரட்சிக் கருத்துக்களையே விதைத்துக் கொண்டிருந்த கவிஞனின் மகள் தூரிகையின் தற்கொலை படித்தவர்களின் கண்களில் மழைத்துளியை உதிர்த்துவிட்டுச் சென்றது. காரணம் ஒரு போராளி புதைகுழியில் தானாக விழுந்ததுதான். இதற்குக் காரணம் என்ன? வளர்ப்புச் சிக்கலா? இல்லை வாழ்க்கைச் சிக்கலா? இதனை சமுதாயம் சரியாகச் சிந்திக்காமல் விட்டுவிட்டால் எதிர்கால இளைய தலைமுறைகள் நம்பிக்கை இல்லாமல் நகர மறுத்துவிடும். இதனைச் சமூகம் சரியாகக் கண்டு கொள்ளவும் வேண்டும். கையாளவும் தெரிய வேண்டும். இது நம் சிந்தனையை விட்டு விலகி விடாமல் சீர்துக்கிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தான் உயிருக்கு உயிராக நேசிப்பது, நம்மை விட்டு நழுவும்போது அல்லது நாமே இழந்து விடுவோமோ என எண்ணும்போது தாமே உயிரை விடத் துணிவது தான் தற்கொலை என நான் எண்ணுகிறேன். ஆனால் அதுவே காரணம் என்றால் எல்லோருக்கும் இன்னொரு வாய்ப்பு துணிந்தவுனுக்கு இன்னும் பல வாய்ப்பு இருக்கும்போது ஏன் பூனை கண்ணை முடிக்கொண்டு பூலோகம் இருண்டதாக எண்ண வேண்டும்.

இறைவன் அளித்த செல்வம் குழந்தைகள் என நினைத்த பெற்றோர்கள் இப்போது இரண்டே போதும் என வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டார்கள். இதனால் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் சில நேரங்களில் கேட்காததை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். இதனால் குழந்தை தேவைப்பட்டது கிடைக்கிறது. அது கிடைக்காவிட்டால்? ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உடன் பிறப்பது குறைவு என்பதால் தியாகம் செய்ய மறுக்கிறது. விட்டுக்கொடுக்கும் தன்மையை இழக்கிறது. பிறரன்பு குறைகிறது. சகிப்புத் தன்மை இல்லாமல் போகிறது. பிறருக்குக் கொடுத்து மகிழும் பேரன்பு குறைந்து வருகிறது. ஆகவே மொத்தத்தில் மனித மாண்பு மரணித்து விடுகிறது.

எதையெல்லாம் சந்திக்காமல் விட்டு விடுகிறோமோ அதைச் சந்தித்து விடுவோமோ? எனப் பயப்படுகிறோம் அவற்றில் முக்கியமானது தோல்வி, அவமானம், அவை துரத்தும்போது துணிந்து எதிர்கொண்டு அதனைத் தாண்டி வருவதே, வாழ்க்கை. தோல்வியைக் கற்றுக் கொடுங்கள். அவமானத்தை அருகில் வரச் சொல்லுங்கள். சில மாடுகளைப் பக்கத்தில் கொண்டுவந்து காட்டி முட்டாது உனை முகர்ந்த பார்க்கும் எனச் சொல்லும்போது அதோடு பழகிவிடுகிறோம் அல்லவா! அதேபோல் அதனைப் பழக்கத்தில் வைக்கச் சொல்லுங்கள். இல்லாததற்கு ஆசைப்படுவது இறகு இல்லாமல் பறப்பதற்கு ஆசைப்படுவதாகும் எங்கோ விழுந்து எப்படியோ காணாமல் போய்விடுவோம். வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதனை உண்ணச் சொல்லுங்கள் எந்த உடை இருக்கிறதோ அதனை உடுத்தச் சொல்லுங்கள் இதற்கு மேல் நினைப்பது எல்லாம் எமனுக்குத் தூதுவிடுவது போன்றதாகும்.

தேவை இல்லாமல் வாகனத்தை இயக்க வழி காட்டாதீர்கள். தேவைப்படும்போதெல்லாம் நடந்து போகச் சொல்லுங்கள் தவறுக்கு வருந்தச் சொல்லுங்கள் தவறியும் திரும்ப வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். தகுதிக்கு மேல் ஆசைப்படக்கூடாது. அது தரித்திரம் எனக் கற்றுக்கொடுங்கள். தகப்பன் தாய் நிலையை ஒரு பாடமாகப் படிக்க சொல்லுங்கள். தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தற்கொலையின் முதல் படியாகும். அதனை ஊக்குவிக்கின்ற பெற்றோர் அவனைத் தற்கொலைக்குத் தூண்டிய தண்டனைக்கு உரியவர்கள்.

தன் குழந்தைக்கு செல்லையும், செல்லத்தையும் கொடுப்பவர்கள் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற கயவர்களைவிடக் கொடியவர்கள். என் பேச்சை கேட்கவே மாட்டேன் என்கிறான் எனக் கைகழுவுகிறவர்கள் பிறந்த குழந்தைக்கு குழிவெட்டுகிறவர்கள் தன் குழந்தை என்ன செய்கிறாள் எனக் கவனிக்க மறுப்பவர்கள் மறப்பவர்கள் உயிரோடு தன் குழந்தைக்குச் சமாதி கட்டுகிறவர்கள் பத்து வயது வரை பச்சைக் குழந்தையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இருபது வயது வரை வேலைக்காரணமாக நடத்துங்கள். முப்பது வயது வரை சக தொழிலாளியாக எண்ணிக் கற்றுக்கொடுங்கள். நாற்பது வயதில் அவனே நாடறிந்த முதலாளியாகிவிடுவான். இதை விட ஒரு பெற்றோர் பிள்ளைக்குச் செய்ய வேண்டியது என்ன? தாய்மொழியைக் கசடறக் கற்றுக் கொடுங்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வான். வாசிக்கக் கற்றுக் கொடுங்கள் யோசிக்கக் கற்றுக் கொள்வான். கூட்டு வாழ்க்கையைக் கற்றுக் கொடுங்கள். பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வான். இதனை விட உங்கள் செல்வத்தை எவ்வாறு செல்வமாக்கப் போகிறீர்கள் செல்வந்தராக்கப் போகிறீர்கள் நீங்கள் வளருங்கள் உங்களைப் பார்த்த அவன் வளர்ந்து கொள்வான்.

“வாழ்க்கையை வாழ்க்கையின்
படியே வாழ்ந்து பார்
மரணம் உன்னை
மறந்துவிடும்.”

ARCHIVES