14

Oct

2022

தப்புத்தாளங்கள்….

உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம்பெறும் குப்பையில் கொட்டப்பட்டு காலில் மிதிபடும் மனிதன் சோரமற்றுப் போனால் குப்பையெனக் கருதப்படுவான். சமீப காலமாக தின இதழ் செய்திகளிலும் ஊடகங்களிலும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் கள்ளக்காதல். அதன் காரணமாக விழுகின்ற படுகொலைகள் ஒரு பதினைந்து நாட்கள் நாளிதழைப் புரட்டிப் பார்க்கும்போது ஏறக்குறைய இருபத்தி எட்டுப் படுகொலைகள் விழுந்துள்ளன. அத்தனையும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனையும், கண்டித்த கணவனையும் மனைவி கூலிப்படையை ஏவிவிட்டு அல்லது கள்ளக்காதலன் உதவியுடன் புருசனைப் போட்டுத்தள்ளிய செய்திகள்தான்.

காதலில் என்ன நல்ல காதல் கள்ளக்காதல் அது ஒருவிதமான உணர்வு அது அன்பினை ஆழப்படுத்தவும் ஆழமான அன்பை புரிந்து கொள்ளவும் இதயங்கள் இடம் மாறும் இன்ப அதிர்ச்சி. இதயத்தை இழந்தது தெரியாமலேயே இனம் புரியாத மகிழ்ச்சியோடு கூடிய மகத்தான உணர்வு அது. ஆனால் அது இன்று உடலோடு உறவாடி உடற்பசியைச் தீர்த்துக் கொள்ள ஊர்மேய ஆசைப்படுகிறது. ஒரு அசுரனின் அகோரப் பசியாக அலைந்து கொண்டு இருக்கிறது. ஆணைப்பொறுத்தமட்டில் அனுபவிக்கத் துடிப்பது பெண்ணைப் பொறுத்தமட்டில் தன் இச்சையைத் தணிப்பது. இதற்காக ஒரு இழிவான செயலைச் செய்யத் துணிகின்ற வக்கிர எண்ணங்களுக்குப் பெயர் காதல் அல்ல காமம். இதையெல்லாம் ஒரு பேசு பொருளாக பேச வேண்டுமா? இலைமறைகாயாக இது இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணலாம்.

இலை மறை காயாக இருந்தால் இதனை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். இது இன்று ஊடகங்களை ஊடுருவி இளைய தலைமுறைகளிடம் விசத்தையல்லவா விதைத்துக்கொண்டு இருக்கிறது. இதனைப் பார்க்கின்ற இளைய தலைமுறைகள் தாங்கள் எதிர்கால வாழ்வை இவர்களுக்கு மத்தியில் எவ்வாறு அமைத்துக்கொள்ளும். சமுதாயம் சரியாக இருந்தால் தானே பயணங்கள் இதமாக இருக்கும். பாவங்களில் பழகிப்போன சமுதாயத்தில் பாதைகள் எவ்வாறு புனிதமாக இருக்கும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருக உணர்வுகள் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொன்றும் சமயம் கிடைத்தால் சாதித்துக் கொள்ளலாம் என்று தமது சதியை அரங்கேற்றும். ஆனால் நமது சமுதாயம், சம்பிரதாயம், மனிதமாண்பு, கலாச்சாரம், ஊர்க்கட்டுப்பாடு, சட்டதிட்டங்கள், நன்னெறிகளை வளர்த்து நல்வழிப்படுத்துவதால் மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் விலங்கு வெளிப்படாமல் விலங்கிடப்பட்டுக் கிடக்கிறது. இதனால் இந்தச் சமுதாயம் சாக்கடையாகாமல் இருக்கிறது.

ஆனால் இன்று மாடல் கலாச்சாரம் என்ற மாறுவேடம் போட்ட கலாச்சாரம் அனுபவிக்கச்சொல்லி இளைய தலைமுறைகளின் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது. இதனால் இலைமறை காயாக இருந்த பல விசயங்கள் ஊடகங்கள் வழியாக ஒவ்வொருவரின் உள்ளங்கைக்கு வந்துவிட்டது. பார்க்கக்கூடாத காட்சிகள் கேட்கக்கூடாத செய்திகள் செய்யக்கூடாத செயல்கள் தொட்டுவிடக்கூடாத பொருட்கள் ஆசைப்படக்கூடாத ஆசைகள் இவையெல்லாம் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அனுபவிக்க பல மின்சாதனப் பொருட்கள் இளைய தலைமுறையில் மடியில் விழ ஆரம்பித்துவிட்டன செய்யக்கூடாததைச் செய்வதற்கு மேலை நாட்டுக் கலாச்சாரத்தை சொல்லிச் சொல்லி நம் நாட்டில் கீழ்த்தரமான செயலைச் செய்கிறார்கள்.

மேலை நாட்டில் எங்காவது கள்ளக்காதல் என்றோ அதனால் கொலை என்றோ காட்ட முடியுமா? இஷ்டப்பட்டால் இணைவார்கள். பிரியம் இல்லாவிட்டால் பிரிவார்கள் இங்கு அப்படி இல்லை கணவன் கொலை மனைவி கைது பிள்ளைகளின் நிலை!?. யாராவது எண்ணிப் பார்த்தோமா? ஒவ்வொருவரின் சுயநலத்திற்குத் தினிபோட ஒரு குடும்பத்தையே நரபலி கொடுத்து நாசமாக்குகிறோம்.

எது சரி? எது தவறு என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. அதற்குரிய அனுபவமும் இல்லை ஆனால் எதற்கு இந்தக் கொலைகள்? என்பதுதான் ஆதங்கமான கேள்வி கள்ளக்காதலுக்கு கடுந்தண்டனை கொடுப்பதா? அல்லது பிரிந்து செல்வதை எளிதாக்குவதா? இதனை படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள் இளைய தலைமுறைக்குப் பாதை காட்டுங்கள் எதிர்காலத்தில் அவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு இதுதான் சொர்க்கம் என நினைத்து நரகத்தில் நடமாடிக் கொண்டு இருக்கக்கூடாது.

ஒருவேளை குடி வந்த பிறகு குடித்துவிட்டு வரும் கணவனிடம் குப்பையோடு ஏன் குடும்பம் நடத்த வேண்டும். சாக்கடையில் எதற்குச் சங்கமிக்க வேண்டும் எனச் சங்கடப்பட்டு வேலிதாண்டி விட்டார்களா? இல்லை பொருந்தாத உறவுகள் பொருத்தமில்லாத உறவுகளோடு கலந்து விட்டதா? இது ஒரு சமுதாயச் சிக்கல்தான். இதனைச் சட்டத்தை வைத்து அடக்க முடியாது. குடும்பம் என்பது இறைவனும் சமுதாயமும் நமக்குக் கொடுத்த மாபெரும் கொடை அதனை மண்ணில் போட்டு மிதித்துவிடக் கூடாது. அறநெறிக் கருத்துக்கள் உலவி வர வேண்டும். நல்லவர்கள் போற்றப்பட வேண்டும். பத்தினிப்பெண்கள் மதிக்கப்படவேண்டும். விருப்பமில்லாத உறவுகள் விலகிவிட பாதையை எளிதாக்க வேண்டும். உறவுகள் உயிர் பெற வேண்டும். அதில் உன்னதம் காண வேண்டும். கற்பே கடவுள் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.

“மனமது செம்மையானால்
மற்றதெல்லாம் செழிப்பாகும்”

ARCHIVES