09

Jan

2024

அன்புள்ள ஆசிரியர்களுக்கு . . .

வணக்கம். கம்பீரத்தோடு வணக்கம் சொன்ன இந்த ஆசிரியச் சமூகத்தை இப்போது கண்ணீரோடு எழுதுகிறேன். மன்னர்கள் வாழ்ந்தார்கள், ஜமீன்தார்கள் வாழ்ந்தார்கள், பண்ணையார்கள் வாழ்ந்தார்கள் என்று சொன்னது போல இங்கு ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் அவல நிலை வந்து விடுமோ? என அஞ்சுகிறேன். ஆனால் ஆசிரியர்களே இல்லையென்றால் அகிலமே இருக்காது அதனைச் சொல்லவும் ஆள் இருக்காது.

மௌன்பேட்டன்பிரபு இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் பயந்தார். காரணம் இந்த மக்கள் அடிமையாகவே இருந்து பழகி விட்டார்கள். அடிமைப்படுத்தவும் அவர்களுக்குள் ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. ஏய்ப்பவர்களிடம் இருப்பவர்கள் ஏமாந்து போவார்களே? எனப் பயந்தார். இருப்பினும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க நேருவோடு Dr. இராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரே ஜனாதிபதி ஆனார். சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக மஸ்கட் பயணிக்கும் போது அந்நாட்டு மன்னரே விமான நிலையம் வந்து வரவேற்றாராம். காரணம் ஜனாதிபதி என்பதற்காக அல்ல. தனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்பதற்காக . . . ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருக்கும் போது இளைஞர்களைக் கனவு காணச் சொன்னார். இந்தியாவை வல்லரசாக்குங்கள் என்றார். இப்படி உயர் பதவிகளில் ஆசிரியர்கள் இருக்கும் போதெல்லாம் உலகம் உற்சாகமடைந்தது.

இதிகாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பல மனைவிகளைக் கொண்ட தசரதனின் மகன் இராமனுக்கு பெண் கொடுக்கத் தயங்கிய ஜனகர் அவன் விசுவாமுத்திரரின் மாணவன் என்றவுடன் சீதையை மணம் முடித்துக் கொடுத்தான். வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள் அலெக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டின் ஆசிரியர் பிளேட்டோ, பிளோட்டோவின் ஆசிரியர் சாக்ரட்டீஸ். இப்படிச் சரித்திரச் சாதனை செய்த ஆசிரியர்களை விட்டு விட்டால் இந்தச்சரித்திரம் உயிர் பெறுமா?

இந்து மதத்தைப் பாருங்கள், குருக்கள்தான் கட்டமைத்திருக்கிறார்கள். புத்தன், இயேசு, நபி, மகாவீரர் என்று ஆரம்பித்து குருநானக் வரை குருவாக இருந்து கட்டமைத்தவர்கள்தான். இவர்களில் சீடர்கள் உருவானதுபோல் இன்று மாணவர்கள் உருவாகிறார்கள். இந்த வழி வந்தவர்கள் தானே ஆசிரியர்கள். அவர்கள் பணியைத் தானே இன்று ஆசிரியர்கள் செய்கிறார்கள்!

காலம் மாறிவிட்டது. ஆசிரியப்பணி அறப்பணி என்பது அற்பப்பணியாகி விட்டது. அர்ப்பணித்து வாழ்ந்த வாழ்க்கை இப்போது பரிதாபத்திற்குரிய பணியாகி விட்டது. ஆசிரியர்களுக்கு என்று இருந்த மரியாதை இப்போது காற்றில் பறக்கிறது. ஆசிரியர்கள் மேல் இருந்த நம்பிக்கை இப்போது கேள்விக்குறியாகி விட்டது. ஆசிரியப் பணியில் உள்ள புனிதம் இப்போது களங்கப்படுத்தப்பட்டு விட்டது.

ஆசிரியர்களிடம் கொண்டு வந்து ஒரு மழலையைக் கொடுத்து இவனை மாணவனாய் மாற்றுங்கள். அவன் மனிதனாகி மகானாக வருவான் என்று ஒவ்வொரு குழந்தையைப் பெற்றவர்களும் நம்பினார்கள். கல்வியை விட ஒழுக்கத்தை அவரே கற்பிப்பார் என்று நம்பினார்கள். ஆனால் இன்று கல்வியை மட்டுமே வளர்ச்சியாகக் கருதி உயிர் போன்ற ஒழுக்கத்தை விட்டு விட்டதால் இங்கு நடைபிணங்களே நடமாடிக் கொண்டு இருக்கிறது.

பெற்றோர்களுக்குக் கல்வி முக்கியம் ஆனால் ஆசிரியர் மீது நம்பிக்கை இல்லாமல் தனிப் படிப்பின் மீது தடுக்கி விழுவதால் ஒழுக்கமற்ற ஊனப்பிள்ளைகளே உலவி வருகின்றன. இன்றையத் தசரதன்கள் எல்லாம் விசுவாமுத்திரர்கள் மீதே சந்தேகப்படுவதால் தன் தலையீடு தகப்பன் என்ற முறையில் கண்ணை மூடிக் கொண்டு குழந்தைகளை நம்புவதால் இன்று இராமன், லட்சுமணன் உருவாகுவதற்குப் பதிலாகத் துரியோதனனும், துச்சாதனனும் உருவாகிச் சமுதாயத்தைத் துகிலுரிக்கிறார்கள்.

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச ஒழுக்கத்தைக் கூட பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. இதில் செல்லம் கொடுத்தும் அவனைச் சிதைக்கிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தன் குழந்தையை அன்னியப்படுத்தி ஆங்கிலக் கல்விக்கு அடமானம் வைத்து விடுகிறார்கள். இதனால் குழந்தை தாய்ப்பால் தவிர்ப்பது போல் தாய் மொழியில் அந்நியப்படுத்தப்படுகிறது. மென்மையாய் வருட வேண்டிய கல்வி சூலுரித்துத் தேன் எடுப்பது போல நாக்கைப் புடுங்கி பேச வைக்கின்ற வன்புணர்ச்சிதான் வகுப்பறையில் நடைபெறுகிறது. இதனால் எங்கள் நர்சரியில் பயிர்களை விடக் களைகளே அதிகமாக வளர்ந்து வருகிறது.

எல்லாப் பழிகளுமே இருக்கிறவன் தலைமேல் என்பது போல் ஆசிரியர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. முடி சரியில்லை, அவன் முழி சரியில்லை. பேச்சுச் சரியில்லை. பழக்கம் சரியில்லை. காரணம் ஆசிரியர் சரியில்லை. கல்வி சொல்லிக் கொடுப்பதா? இல்லை கத்திரிக்கோலை எடுத்து அவன் முடியை வெட்டுவதா? என்ன உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்?

பள்ளியில் வந்தவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதா? வராதவனைத் தேடிச் செல்வதா? பள்ளிக்கு வருகிறவர்களைத் தேடிப்பிடித்துச் சேர்ப்பதா? இல்லை. வந்து போனவன் எங்கு போய்ச் சேர்ந்தான்! என்ற புள்ளி விவரம் சேகரிப்பதா? எமிஸ் என்ற எமனோடு போராட என்னால முடியவில்லை! என்ற நிலை வந்து விட்டது.

மாணவன் தவறு செய்தால் தண்டனை ஆசிரியருக்குத்தான். தட்டிக் கேட்டால்? எட்டி உதைக்கிறான். தண்டித்தால் காவலர்கள் மிரட்டுவார்கள். கண்டித்தால் பெற்றோர்கள் மிரட்டுவார்கள். கண்டித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டால் மொத்தமாய் விரட்டுவார்கள். பெண் குழந்தைகள் முறை தவறி நடந்தால்? பள்ளிப் பெயர் கெட்டு போய் விடும். தடுத்துக் கண்டித்தால் போக்சோ சட்டம் பாயும். இரணடுக்கும் நடுவே இருதலைக் கொள்ளி எறும்பாய் என்னதான் செய்வது?

மாணவர்கள் தோல்வி அடைந்தால் மானங்கெட்ட கேள்வி கேட்பார்கள். மாணவர்கள் குறைந்து விட்டால் வேறு பள்ளிக்குத் தூக்கி அடிப்பார்கள். இவர்களுக்கு என்ன குறை? என்று ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இல்லாத தவறுகளைக் கூட இருப்பதாகப் படம் காட்டுவார்கள். மொத்தத்தில் உங்களை முடித்துவிட நினைப்பார்கள்.

அமெரிக்காவில் மதிப்புக்கு உரியவர்கள் விஞ்ஞானிகளும், ஆசிரியர்களும். ஏனெனில் இவர்கள் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்குபவர்கள். பிரான்சில் நீதி மன்றத்தில் கூட ஆசிரியர்களை நாற்காலியில் அமர வைத்துத்தான் விசாரிப்பார்கள். ஜப்பானில் அரசு அனுமதியின்றி ஆசிரியர்களை விசாரிக்க முடியாது. கொரியாவில் அமைச்சர்களை விட ஆசிரியர்கள் உயர்ந்தவர்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக ஊதியம் பெறுபவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.

ஆசிரியர்கள் பார்வை படாவிட்டால் திருடர்களும், ஊழல்வாதிகளும் இங்கு உருவாகி விடுவார்கள். ஆனால் இங்கு மதவாதிகள், அரசியல்வாதிகள் என்று மாற்றுருவில் வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் வாழ வேண்டுமென்றால் முட்டாள்களும், மூடர்களும் இருக்க வேண்டும் அதற்காக உங்களைத் தடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் அரசியலையும், மதத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

அதற்காக அவர்களே கதை கட்டுவார்கள். உங்களை மட்டம் தட்டுவார்கள். உங்களுக்கு எதிராக மாணவர்களையும், பெற்றோர்களையும் நிறுத்துவார்கள். காவல்துறையை வைத்து அரட்டுவார்கள். கல்வியாளர்களை வைத்து மிரட்டுவார்கள். ஆனால் கலங்காதீர்கள். கண்ணீர் விடாதீர்கள். மனம் தளராதீர்கள். நீங்கள் ஊரார் பிள்ளையை வளர்ப்பவர்கள். உலகிற்கே உருவம் கொடுப்பவர்கள். இந்த மக்கள் கடவுளைத் தேடுகிறார்கள். அவர்கள் நீங்கள்தான் என கண்டுபடிக்கும் வரை உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.

கண்ணீருடன்

மாணவன்.

“அரக்கனைக் கொல்வது
ஆண்டவனின் சட்டம்
அரக்கனையும் திருத்துவதுதான்
ஆசிரியர்களின் திட்டம்.”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES