20

Jan

2024

நா(ய்) பேசுகிறேன்…

எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவினைப் பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் ஒருவர் தன் மகனைத் திட்டிக் கொண்டு இருந்தார். கையில் அவனது அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி அட்டை இருந்தது. நாயே! என்ன படிப்புப் படிச்சிருக்க? பிச்சக்கார நாயே! படிக்காம என்ன தெருப்பொறுக்கிட்டு அலைஞ்சியா? என்று பலவாறு திட்டிக் கொண்டு பேச்சுக்குப் பேச்சு நாயே! நாயே! என்று கோபத்தில் கொப்பளித்தார். எனக்கு என்ன கேள்வி என்றால்? இரு மனிதப் பிறவிகள் சண்டையில் ஏன் நாயை இழுக்கிறீர்கள்? அது என்ன பாவம் செய்தது? என்ற போது ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. பக்கத்தில் படுத்திருந்த ஒரு நாய் விரக்தியாய் சிரித்தது.

அதன் கண்ணில் கண்ணீர் மனதில் விரக்தி, எண்ணத்தில் சலிப்பு, எழுவதற்கு மனம் இல்லாமல் எழுந்து வந்து என்னருகில் படுத்தது. “பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்” என்பது போல் அது புலம்பி விட்டு, ஏறிட்டு என்னைப் பார்த்தது. என்னடா இப்படி பேசுதே? என ஆச்சரியத்துடன் நாயைப் பார்க்க அது விரக்தியின் விளிம்பில் நின்று உளர ஆரம்பித்தது. அது என்னிடத்தில் அதன் மனச் சுமையை இறக்கி வைத்தது போல் பேச ஆரம்பித்தது.

இனம் இனத்தோடு தான் சேர வேண்டும் இனம் மாறி இணைந்தால் குணம் கெட்டுத்தான் போகும். நாங்கள் நாயாக நாயோடு இருக்கும் வரை நன்றியுள்ள விலங்குதான். இதில் சுயநலம் உள்ள மனிதன் தன்னுடைய பேராசையால் ஆண்டவனின் தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டான். எந்த உழைப்புமில்லாமல் பிறரை ஏவிப்பிழைத்தும், ஏய்த்துப் பிழைத்தும், ஏசிப் பிழைத்தும் வந்த மனிதன் திடிரென்று துரத்தப் பட்டதால் செய்வதறியாது திகைத்தான். உடனே மனிதன் தன்னால் தனியாக வாழ முடியாது எனத் தயங்கிய மனிதன் தனக்கு உதவியாக ஏதேன் தோட்டத்திலிருந்து சில உயிர்களையும் அதாவது ஆடும், மாடும், குதிரையும், கழுதையும், நாயும், பூனையும், கோழியும், வாத்தும் இன்னும் பிறவும் தன்னோடு அழைத்து வந்தான். இதில் நாயைத் தவிர மற்ற அனைத்தும் மனிதனுக்கு என்ன என்ன உதவி தேவையோ அதைச் செய்து விட்டு புல், பூண்டு, இலை, தளை, தானியம், திரவியம், புழுப்பூச்சிகளைத் தின்று உயிர்வாழ்ந்து வந்தன.

நாய் மட்டும் மனிதனுக்கு நெருக்கமானது. அதாவது புலி, சிறுத்தையைப்போல வீரமும், வீரியமும் இருப்பதால், வேட்டையாடும் குணமும் இருப்பதால் அவை மனிதனுக்குப் பாதுகாப்பாக இருக்கும் எனக்கருதிய மனிதன் தன்னுடனே அதனை வைத்துக் கொண்டான். தனது உணவையே தின்னக் கொடுத்தான். காலப்போக்கில் தான் உண்டதை எச்சிலோடு எங்களுக்குக் கொடுத்து எங்களைப் பிச்சைக்காரனாக்கினான். அவன் கையையே எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்க வைத்தான். படைப்பில் நாங்கள் நன்றியுள்ள விலங்கு மனிதனின் பழக்கத்தால் நாங்கள் பிச்சைக்காரனானோம். ஏனென்றால், பிச்சைக்கார வம்சம் எங்களிடம் இல்லை. மனிதர்களிடத்தில் தான் இருக்கிறது என்றது.

உடனே இதை வைத்து மனிதர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா? என்று கேட்டேன். அதை வைத்துச் சொல்லவில்லை. இதோ நான் சிலரை அடையாளம் காட்டுகிறேன். அவையெல்லாம் யாரிடம் வளர்ந்தது என்றும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு நாய் எழுந்து தெருவிற்குள் இறங்கியது. நானும் அதன் பின்னால் வந்து தெருவில் நின்றேன்.

தூரத்தில் நின்று படுத்திருந்த ஒரு நாயை காட்டியது. அது அந்த வீட்டிற்குப் பாதுகாப்பாய் இருக்கும். திருடர்களையோ பாம்பு போன்ற விசச் சந்துகளையோ உள்ளே விடாமல் இரவு பகல் பாராமல் அது எப்போதும் பாதுகாக்கும். ஆனாலும் அவர்கள் எப்போது சோறு போடுவார்களோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வாழும். அது விவசாயி வளர்த்த நாய்.

அதோ அந்த வீதியின் மூலையில் நிற்கின்ற ஒரு நாயைப் பாருங்கள். அந்த நாய் கம்பீரமாக நிற்க, மற்ற நாய்கள் எல்லாம் வாலைச்சுருட்டிக் கொண்டு அதன் முன்னால் பணிந்து நிற்கிறது. இந்த நாய் ஒரு மதவாதி வளர்க்கின்ற நாய். அவர் முன்னால் நிற்க, பக்தர்கள் சுற்றி பக்தியோடு நிற்க அதைப் பார்த்து பழகிய நாய் தான் அந்த நாய்.

அதோ ஒரு நாய் எதையோ ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. மற்ற நாய்களுக்கும் கொடுக்காமல் தானும் திங்காமல் ஒடுகிறதே, அது அரசியல்வாதி வளர்த்த நாய். அதோ அங்கே ஒரு நாய் பிற நாய்களை, இந்த ஏரியாவுக்குள் எந்த நாயையும் உள்ளே விடாமல் விரட்டுகிறதே, அது ஒரு ரவுடி வளர்க்கிற நாயாகும். அதோ ஓடிக்கொண்டே இருக்கிறதே, அதற்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை வெட்டியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது இந்தக் கால இளைஞர்கள் வளர்க்கின்ற நாய்.

அதோ அங்கே போலிஸ்காரர்களுடன் சில நாய்கள் ஓடுகிறதே. அது அவர்கள் சொன்ன வேலையைச் செய்து விட்டு உணவை வாங்கித் தின்னும். அது அரசுப்பணியாளர்கள் வளர்த்த நாய். வேலை உண்டு. ஊதியம் உண்டு என்று இருக்கும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாது.

அப்போது வேட்டை நாய்கள் சில ஒருவனின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நாய்கள் தொழிலாளிகள் வளர்த்த நாய். எஜமானுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்து விட்டு ஒரு இறைச்சித் துண்டைப் பெற்றுச் செல்லும் நாய்கள். அதோ அங்கே நிற்கிறதே அது திருடனே வந்து பிஸ்கட் போட்டாலும் வாலாட்டிக்கிட்டே நிற்கும் அது பணம் வாங்கி ஓட்டுப்போடும் வாக்காளர்கள் வளர்த்த நாய். வருகிறவன் திருடன் என்று தெரிந்தாலும் பிஸ்கட்டுக்கு வாலாட்டுகிற நாய்கள்.

அதோ ஒருவன் நிற்கிறானே அவனைச்சுற்றி நிற்கிற நாய்கள் அவன் யாரை ஏவிவிடுகிறானோ அவர்களைப் போய்க் கடிக்கும். அந்த நாய்கள் கூலிப் படைக்காரனால் வளர்க்கப்படுகிற நாய்கள். இதோ இங்கே ஒரு நாய் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறதே இந்த நாய் எந்த நாய் வந்தாலும் அதை உண்ணவிடாமல் துரத்தும் காரணம் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் கதவை அடைத்துக் கொண்டு சாப்பிடுகின்ற பக்கத்து வீட்டுக்காரன் வளர்க்கின்ற நாய் அது.

மிகவும் கேவலமான விசயங்களையும் இந்த மனிதர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு விட்டோம். அதுதான் செக்ஸ் பல உயிரினங்கள் தன் இணையைத் தவிர மற்றதோடு இணையாது. சில உயிர்கள் இணைவது கூடத் தெரியாது. ஆனால் கேவலம் செக்ஸ்காக, அடுத்தவர்கள் தெரியும்படி அசிங்கப்படுவது மனிதனும் அவனோடு பழகிய நாய்களாகிய நாங்களும் தான். பிறர் அசிங்கப்படும்படி கல்லெடுத்து எறியும் படி காரித்துப்பும்படி உள்ள செக்ஸ் மனிதர்களுக்கும், நாய்களுக்குமே. ஒரு பெண்நாய்க்குப் பின்னால் பல நாய்கள் நாக்குத் தொங்கப் போட்டுக்கிட்டு பின்னாலே அலையும் இதெல்லாம் பிறர் மனை நோக்கித் திரியும் பொறுக்கிகளிடம் அதாவது பெண் மோகத்திற்காக அலைகின்ற அயோக்கியர்கள் வளர்த்த நாயாகும்.

அப்போது அந்தத் தெரு வழியாக வந்தவரை ஒரு நாய் குரைத்துக் கொண்டே வந்தது. இது ஏன்? என்று அந்த நாயிடம் கேட்டேன். அந்த நாய் சொன்னது இது குரைத்து அவரைத் திருடனாக்க முயற்சி செய்கிறது. அது உங்களில் பலர் சிலரைப் பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி அல்லது கீழ்தராக விமர்சித்து அவர் பெயரைக் கெடுக்க முயற்சிப்பார்களே அவர்களிடம் வளர்ந்த நாய் இது.

பெற்றோர்கள் கவனிப்பில் வாழ்கின்ற பிள்ளைகளிடம் வளர்ந்தது வீட்டு நாய்கள். கவனிப்பற்ற ஊதாரிப் பிள்ளைகளிடம் வளர்ந்த நாய்கள் தெருநாய்களாகி விடுகின்றன. நாய்களும் மனிதனைப் போல் பேராசையால் ஓடி ஓடி இறுதி நாட்களில் சொரி நாய் ஆகிவிடுகிறது. மனிதனோடு பழகியதால் மனிதர்களைப்போல் இனத்தைப் பார்த்து முறைப்பது, குரைப்பது சண்டையிடுவது பேராசையோடு அலைவது சொரிப் பிடித்து இறப்பது பல வியாதிகளை அனுபவிப்பது என மனிதர்களின் பாவங்கள் எங்கள் மேலும் விழுந்து அவர்களும் நாங்களும் அவதிப்படுகிறோம் நொந்து பேசி நொடிந்து போகிறோம். இப்படி அவரவர் விருப்பப்படி அவரவர் வளர்த்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

நாய் படாதபாடு படுதல் என்று பேசுகிறீர்கள் போதும் போதும் உங்கள் சகவாசம்.. எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் நாங்களாக இருந்தால் நன்றியுள்ள விலங்கு. எங்களையும் கெடுத்துவிட்டு எங்கள் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுவது. மனிதர்களே இனி வேண்டாம் உங்கள் உறவு எங்களுக்கு வேண்டும் உங்கள் பிரிவு.

“பூவோடு சேர்ந்த நாறும்
மணம் பெறும்
சாக்கடையில் கலந்த
பன்னீரும் சகதியாகும்.”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES