21

Dec

2023

கடவுளைத்தேடி…

மார்கழி மாதம் எல்லோரும் கடவுளைத் தேடும் மாதம் இந்த நாட்களில் விரதம் இருந்து பல்வேறு தயாரிப்புகளைச் செய்து ஆயத்தமாகி கடவுளைக் கண்டடைவார்கள். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்று. கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்ப்பார்கள். இந்துக்கள் பல்வேறு கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வார்கள், பஜனை பாடுவார்கள், மந்திரம் ஓதுவார்கள். மசூதிகளில் பாங்கு ஓதுவார்கள், கடவுளைக் கண்டீர்களா? உங்கள் கவலைகளைச் சொன்னீர்களா? அவர் சொன்ன கருத்துக்களை எங்களுக்கும் சொல்வீர்களா?

தேடினால் கிடைக்காது என்றால் தேடுகிறவன் முட்டாளா? இல்லை தேவையில்லாததைச் தேடுகிறானா? இல்லை தேட வேண்டிய இடத்தை விட்டுவிட்டுத் திசைமாறி அலைகிறானா? நாம் எதை விரும்புகிறோமோ? எதை நோக்கிப் போகிறோமோ? அதனை நன்றாகப் புரிந்து கொண்ட வியாபாரிகள் (மதவாதிகள்) அவர்கள் வைத்திருப்பதாக நம்மிடம் வருவார்கள். அதனால்தான் இதுவரை இந்த வியாபாரிகளிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம்! ஆனால் பொருள் நல்லாயில்லை என்று சொன்னால் உனக்குப் புரியவில்லை நீ முட்டாள் என்று கூறிவிடுவார்கள். நாம் கொஞ்சம் நம்பிக்கை தளர்ந்தால் இங்கு பல்வேறு வியாபாரிகள் இருக்கிறார்கள். அங்கு இல்லை என்றால் இங்கு வாருங்கள் என்று பல கடைகளைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் மதக்குருமார்கள் தன் கடைக்குத் தானே விளம்பரதாரராக மாறிவிடுகிறார்கள்.

விவிலியத்தில் பாருங்கள் கடவுள் பூமிக்கு வரும்போது கடவுளாக வரவில்லை மனிதனாக வருகிறார். அப்போது இருந்த யூதர்கள் கடவுளைத் தேடியதால் அவர்கள் மனிதனில் இருப்பதை மறந்துவிட்டார்கள். ஆனால் மனிதரில் கிறிஸ்துவைக் கண்டவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டார்கள். இப்போது யூதர்கள் கடவுளை விண்ணில் தேடினார்கள் கிறிஸ்தவர்கள் மண்ணில் மனிதனாகக் கண்டார்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் கடவுள் மனித அவதாரம் எடுத்தவர் தான் அரண்மனையில் பிறந்தாலும் காடுமேடு என அலைந்து யாவரோடும் காலாரப் பயணித்தவர்கள். மனிதர்களோடு மனிதர்களாக கலந்தவர்கள். அவர்கள் அரண்மனையில் கூட இல்லாதவர்கள். இப்போது ஆலயத்திலா வந்து இருப்பார்கள்? தொழுவத்தில் பிறந்தவரை ஏன் தொழுகைக் கூடங்களில் தேடுகிறீர்கள் உங்கள் வசதிக்காக? அப்படித்தானே!

கடவுளும் மனிதனும் கலந்தே இருப்பவர்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கடவுள் இருக்கிறான். ஒவ்வொரு கடவுளுக்குள்ளும் ஒரு மனிதன் பிறக்கிறான். ஆனால் அவன் எப்போதும் மனித உருவில் தான் இருக்கிறான் இதனைக் கண்டுபிடித்தவர்கள் கடவுளைக் கண்டார்கள்.

கண்டுபிடிக்காதவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனைச் சொல்லி பலர் ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

கடவுளுக்கு நீங்கள் கோயில் கட்டுகிறீர்கள், புடவை கட்டுகிறீர்கள், படையல் வைக்கிறீர்கள். ஆகவே நீங்கள் தான் கடவுள் தேவையை நிறைவேற்றுபவர்களா?

கோபுரங்கள் அமைக்கிறீர்கள், அலங்கார விளக்குகள், பளிங்குக் கற்கள், வண்ணச் சிற்பங்கள் அப்படியென்றால் கடவுள் ஆடம்பரத்தை விரும்புகிறவனா? ஏழ்மையில் பிறந்தான், வளர்ந்தான் என்பதெல்லாம் பொய்யா?

ஆடு, மாடு, கோழி வெட்டுகிறீர்கள், அலகு குத்துகிறீர்கள், முடி எடுக்கிறீர்கள் அப்படியென்றால் கடவுள் உயிர்களை வதைப்பவனா? உயிர்களை உருவாக்கியவனே உருக்குலைப்பானா?

கடவுள் என்பவன் தன்னிடம் இல்லாதது எதுவுமில்லை தன்னிடம் இருந்துதான் தன்னை நம்புகிறவனுக்கு எல்லாம் வழங்குகிறான். ஆனால் இங்கு ஏழைகளிடத்தில் வரிவாங்கி இறைவனுக்கு விழா கொண்டாடுகிறீர்களே!? நீங்களா வழிகாட்டிகள்? நீங்கள் வழிபறித்திருடர்கள்!.

எம்மதம், உம்மதம் என்று இந்த மானிடச் சமுதாயம் முட்டிமோதி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்போது எந்தச் சாமியும் வந்து சமரசம் செய்ய வரவில்லையே!

தொழுவத்தில் இறைவன் பிறந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டு ஏன் பட்டுடை அணிந்து பொன் நகை தரித்து வண்ண விளக்குகளுக்கு மத்தியில் அலங்கார அமைப்புகளுடன் அமைக்கப்பட்ட குடிலில் தேடுகிறோம்? குடிசை கோயிலுக்குள் தான் இருந்ததா?

கடைசியாகக் கடவுளைக் கண்டவர்கள் சொன்னது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள். நீங்கள் கடவுள் என்று நினைத்து எதை எதை அவனிடம் கேட்டீர்களோ? அதை எவர் கொண்டு கொடுத்தார்களோ அவர்கள் தானே தெய்வங்கள், இப்போது சொல்லுங்கள் உங்கள் தேவைகள் என்ன? அதை இறைவனிடம் எப்போது கேட்டீர்கள்? அது எப்போது நிறைவேறியது யார் மூலமாக நிறைவேறியது? அவர்கள் தானே கடவுள்! இல்லை கடவுள் ஒரு ஆளை அனுப்பி வைத்தான் என்று கதை விடாதீர்கள் ஏனென்றால் கடவுளுக்குப் பதிலாளியும் கிடையாது! பினாமியும் தெரியாது.

கடவுளைக் கலையில் தேடுகிறீர்கள்!, சிலையில் தேடுகிறீர்கள்! ஒளியில் தேடுகிறீர்கள்! மொழியில் தேடுகிறீர்கள்! கோவிலில் தேடுகிறீர்கள்! குளத்தில் தேடுகிறீர்கள்! இன்னும் பலவற்றில் கூடத் தேடுங்கள். ஆனால் மனிதனிலும் தேடுங்கள் கடவுளுக்குக் கொடுக்க நினைக்கும்போது மனிதர்களிடம் போய்க் கொடுங்கள் வாங்க நினைக்கும்போது ஒரு மனிதன் தான் வந்து கொடுப்பான். அவர்களே கடவுள்.

மனிதனுக்குத் தொடக்கம் முடிவு உண்டு கடவுளுக்குக் கிடையாது என்பார். அப்படியென்றால் பூமிக்கு வந்தாகச் சொன்ன உங்கள் கடவுள்கள் எங்கே? உயிருடன் தானே இந்த உலகத்தில் எங்கேயாவது இருப்பார்! அவரது விலாசம் எங்கே? யாரும் எட்ட முடியாத இடத்தில் இருப்பதாகச் சொல்லி விடுவோம் என நினைத்து இமயத்திலிருக்கிறார் என்றீர்கள் இப்போது என்னாச்சு? இமயமும் போயாச்சு? கடவுளைத்தான் காணமுடியவில்லை கடவுள் என்பது கண்டுபிடி பார்ப்போம்? என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் அல்ல.

புத்தன், இயேசு, காந்தி, ராமன், கண்ணன் எனப் பூமிக்கு மனித உருவில் வந்தவர்கள் தானே! அப்படியென்றால் நம்மோடு தானே இருப்பவர்கள் அப்படியென்றால் எப்போது இந்தப் பிரிவினை வந்தது? அவர் மேலே நாம் கீழே என்று கண்டுபிடித்த விஞ்ஞானி யார்? நாம் வணங்கும் அத்தனை கடவுளும் மனிதர்களுக்காக அதிகாரத்தோடு போராடியவர்கள் ஆனால் இன்று கடவுள் பெயரால் அதிகாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்தும் மடமையை மதம் என்கிறார்கள் மதங்கள் வேண்டாம்! கடவுளைக் காண்போம். மதங்களில் அல்ல மனிதனில் கடவுளைத் தேடுங்கள்.

ஏழையாக, எளியோராக, நண்பனாக, அன்பனாக, பெற்றோராக, பிரியமானவராக, உதவி கேட்பவராக, உற்சாகம் கொடுப்பவராக குருவாக, குழந்தையாக, எதிரியாக, எதிரில் வருபவராக, துரோகியாக, தூரத்து உறவாக, எல்லா உருவங்களிலும் கடவுள் என்னைச் சந்திக்கிறார். கடவுளிடம் கையேந்தும் பிச்சைக்காரர்களாய் வாழ்வதைவிட கையிலிருப்பதைக் கொடுக்கும் கடவுளாக மாறுவோம். எல்லாம் தனக்குத்தான் என அனைத்தையும் அனுபவிக்கத் துடிக்கும் இச்சை காரர்களாய் இருப்பதை விட பிற இன்னல்கள் போக்கும் ஈசனாய் இருப்போம். மனிதர்கள் பெரிது என மனத்தால் நினைத்துப் பாருங்கள். மற்றதெல்லாம் குப்பையெனத் தெரியும். நீங்கள் கடந்து வந்த பாதையில் உங்களுக்கு உதவியவர் அத்தனைபேரும் கடவுள்களே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் செய்த உதவிகள் கடவுளுக்குச் செய்த அர்ச்சனைகளே உங்கள் விரதம் ஒருவர் பசியைத் தீர்த்தால் உங்கள் பக்தி பாராட்டுக்குறியது அர்ச்சனையைத் தொடருங்கள் ஆண்டவனாய் மாருங்கள்.

“கண்ணில் தெரியும் மனிதனிடத்தில்
கடவுளைக் காண முடியாதவனின்
முகத்திலிருப்பது கண்களல்ல
அருவருக்கத்தக்க புண்களே!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES