31

Dec

2023

முன்னாள் மாணவருக்கு…

விஜி விடைபெற்றாயோ? இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் இழக்கக் கூடாதவர்களை இழக்கும் போதுதான் இதயம் வலிக்கிறது. ஆலமரமே சாயும்போது அருகிலுள்ள அத்தனை செடிகொடிகளும் அழிந்து விடுமல்லவா! அதிலிருந்த பறவைகள், முட்டைகள், குஞ்சுகள் என்னாவது? ஆண்டவன் கூட கண்டுகொள்ளவில்லையா?

மதுரையில் பிறந்த மனிதநேயமே உன் தாய் பெற்றதல்லவா பிள்ளை! ஆனால் உன்னைப் பெற்று மண்ணுக்குத் தந்துவிட்டு அவள் விண்ணுக்குச் சென்று விட்டாள். நீ இந்த மண்ணுக்கே மகனாகி விட்டாய். இப்போது மகானும் ஆகிவிட்டாய்!

சாப்பிட்டீர்களா! என விசாரிக்கும் சாகாவரமே! இனிமேல் பசியோடிருப்பவர்களை யார் பார்த்துக் கொள்வார்? நாங்கள் கண்ணீர் சிந்திவிடக்கூடாது எனக் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டவனே! இப்போது உன் இறப்பில் உடல் முழுவதும் உடைந்து அழுகிறதே தேற்றவும் ஆளில்லை! தூக்கவும் ஆளில்லை துவண்டு கிடக்கிறோம். ஒரு கருப்பு எம்.ஜி.ஆர் மறைந்து விட்டார். எங்களுக்கு கருப்பு தினமாக உறைந்துவிட்டது.

இறந்தவர்கள் பிணம் என்பார்கள் ஆனால் உன் இறப்பில் நீ சாமியாகிவிட்டாய்! நாங்கள் நடைபிணமாகி விட்டோம். இனி எங்களை எடுத்தால் என்ன? எரித்தால் என்ன? கடலே வற்றிய பிறகு மீன்களுக்கு ஏது மிச்சம்? அதற்கு கருவாடு! எங்களுக்கு சுடுகாடு!

கருப்பு மனிதர்களை ஒதுக்கிய திரைத்துறையில் வைரமாக வந்து விழுந்தவனே! உன் கருவிழிகள் மிரட்டியதைத் தானே எல்லோர் இரு விழிகளும் மிரண்டு பார்த்தன! இப்போது ஏன் கண்மூடிக் கொண்டாய்? எங்கள் கண்ணீரைப் பார்க்கப் பிடிக்கவில்லையோ!

ஒரு வாரத்திற்குமுன் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. தாங்கிக் கொண்டோம். ஆனால் இப்போது மக்களே வெள்ளமாகித் தவிக்கிறார்களே! மகாராஜா ஏன் மௌனமாக இருக்கிறாய். எல்லோரும் சமம் என்று எண்ணி உணவு பரிமாறியவனே! உன் இறப்பிற்குப் பின் எங்களுக்கு உணவுகூட விசமாகத் தெரிகிறதே. இனி பட்டினி கிடந்தாலும் கேட்க ஆளில்லாத அனாதைகளாகிப் போனோம்! கேட்கமாட்டாயா? இனி எங்களைப் பார்க்க மாட்டாயா?

தாய் இல்லாத குறை உனக்கு நன்றாகத் தெரியும் எங்களுக்கு எல்லாம் தாயாக இருந்தவன் ஏன் தவிக்கவிட்டுப் போனாய் ஆண்டவனின் அவசர அழைப்பா? ஆனால் அந்த ஆண்டவனே எத்தனையோபேர் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டானே! மனிதர்கள் நடிக்கத் தெரியாத ஒரு நடிகன். கேமராவிற்கு முன் மட்டுமே நடித்தவன் இல்லை இல்லை வாழ்ந்தவன். மக்களோடு மக்களாக வாழத் துடித்த ஒரு மாமனிதன். தனக்குக் கிடைத்தது எல்லாம் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல். தான் பயின்ற பள்ளியை எப்போதும் மறக்காத பழைய மாணவன் ஆசிரியர்கள் பெயரை அரியணையில் இருக்கும்போதும் உச்சரிக்கும் சீடன் எல்லா நல்ல குணங்களும் இருக்கப் பெற்றவர் தான் இந்த மகத்தான மனிதன் எங்கள் மாண்புமிகு மாணவன்.

மனிதனில் புரட்சியை வளர்த்து, மக்களுக்குள் எழுச்சியை விதைத்தவர். ஆண்டாள் அழகர் மகனாகப் பிறந்ததனால் ஆண்டான்-அடிமை என்பதனை அடியோடு வேரறுத்தவர் ஓடுகிற குதிரையிலே பணத்தைக் கட்டி தன்னை உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்கிற நட்சத்திரங்களுக்கு மத்தியில் வாய்ப்புத் தேடுகிறவர்களுக்கெல்லாம் வாசல் தேடிச் சென்று ஏறக்குறைய 56 இணை இயக்குநர்களை இயக்குநர்களாக ஒளிர வைத்து திரைப்படக் கல்லூரியில் மாணவர்களையும் அழைத்து வந்து ஊமை விழிகளால் மிரட்டி, புலன் விசாரணையில் ஜெயித்து கேப்டன் பிரபாகரனாக உயர்ந்தவன் கூலிக்காரர்களைக் கூட நல்லவன். வல்லவனாக உயர்த்துபவன் சட்டம் ஒரு இருட்டறையைக் கூட சிவப்பு மல்லியால் சிறைக்கு அனுப்பச் சாட்சியோடு வெற்றி பெற்ற சபாஷ் மனிதன். தீர்ப்பு என் கையில், எனக்கு நானே நீதிபதி என்ற நெஞ்சுக்கு நீதி உள்ள வல்லரசும், பேரரசும் நீதான். நீ கொடுத்தது வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது வாழ்க்கை நீ வாழ்வளித்த வள்ளல் அல்லவா!

தமிழ் எங்கள் உயிர், தமிழன் தான் எனக்கு வாழ்வு என்று நடித்துப் பிச்சையெடுத்துவிட்டு தமிழர்களுக்காக எதையும் செய்யாத எத்தனையோ ஒப்பனை நடிகர்கள்களைப் போல் அல்லாமல் தமிழர்களுக்காகவே வாழ்ந்த தலைவன் அல்லவா? அடிப்படை வசதியான மருத்துவத்திற்கும் கல்விக்கும் அள்ளிக் கொடுத்தவனல்லவா நீ! திரையில் இருந்த பலர் உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் அவர்கள் இதயம் வலித்தது உன் இறப்பில் மட்டும் தான். அவர்கள் கண்ணீர் கடலில் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். நீயோ தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாய். உன் உப்பைத் தின்றுவிட்டு உன்னையே குரைத்த நாய்களும் உண்டு அவர்களுக்கு இந்தச் சமுதாயம் சமாதிகட்டும் கடனில் கிடந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த சுந்தர பாண்டியன் நீதானே. நீ மதுரையில் பிறந்தது எங்களுக்குக் கெத்து.

கருப்பு என்று உன்னை ஒதுக்கிய சிவப்பு நடிகைகள் எல்லாம் காலம் கடந்து உன் கால்சீட்டிற்குத் தவமிருந்தார்களே. அது உன் எழுச்சி திரைத்துறையில் விஜயகாந்த் காலம் ஒரு வரலாற்றுக் காலம். உன் காலத்தில் ஒளிர்ந்த ஒவ்வொரு நட்சத்திரங்களையும் ஊனப் படாமல் மானம் காத்தவன் நீ திரைத்துறையில் சம்பாதித்த கருப்புப் பணங்களைக் காத்துக் கொள்ள அரசியல்வாதிகளின் அடிவருடவும் அவ்வப்போது அரசியலுக்கு வருவேன் என்று மிரட்டுவதும் கோமாளிக் கூத்தாகவே இருந்தது. ஆனால் தான் உழைத்த அத்தனை பணத்தையும் ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவன் நீதானையா! எங்களிடம் இருந்த ஒரே கருப்புப் பணம் விஜயகாந்த்தான்! ஏனென்றால் நாங்கள் உழைக்காமல் நாங்கள் வரிகட்டாமல் எங்களிடம் இருக்கும் பணம் நீதானையா! தமிழ் படங்களைத் தவிர எந்த மொழிப்படத்திற்கும் தன் நாவை அடகு வைக்காத தன்மானம் உள்ள தமிழன் ஐயா நீ!

அரசியலுக்கும் வந்து சிங்கம் சிங்கிளா நின்று செயித்தது. எதிர்கட்சித்தலைவராக எழுந்து நின்றது. தமிழனுக்கு ஒரு விடிவெள்ளி கிடைத்தது என்று எண்ணினோம் அப்போதுதான் கடவுளே எங்களை கழுவேற்றினான். விஜயகாந்தின் உடல்நலம் குன்றியது நடிகன் என்பதால் மயிலாக வந்து மனதைக் கவர்ந்தவனல்ல புயலாக வந்து எங்களுக்காகப் போராடியவன் எங்கள் தன்மானத்திற்காகப் போரடியவன் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடியவன். அவனுடைய கோபமும் கொந்தளிப்பும்தான் தமிழனின் தலையாய அடையாளம். எங்களுக்கு ஒரு சுபாஷ் சந்திரபோஸ் கிடைத்துவிட்டார். இனி சுத்தமுள்ள சுதந்திரம் அடையப் போகிறோம் என எண்ணும் போதுதான். நீ சுகவீனப்பட்டுவிட்டாய்! எங்கள் சப்த நாடியும் அடங்கிவிட்டது. மீண்டும் அடிமையானோம். அதற்கும் சில ஊடகங்கள் உதவி செய்தன. உன்னைக் கோமாளியாகக் காட்டவே குறியாய் இருந்தது. உன் இறப்பிற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து அவர்கள் தான் ஏமாளிகள் என்று இந்த உலகம் புரிந்து கொள்ளும்.

ஐயா உனக்கு மனித இனமே அழுகுதய்யா! தலையில் அடித்துக் கொண்டு அழுகுதய்யா! வீதியில் புரண்டு அழுகுதய்யா! நீ இருக்கும்வரை எங்களை அழவிட்டதில்லை! இப்போ உன் கண்முன்னே அழுதாலும் நீ கண்டுகொள்ளவில்லை காரணம் நாங்கள் உன்னைப் பார்க்கிறோம். நீ எங்களைப் பார்க்கவில்லை. கண்ணீரைத் துடைத்த உன் கைகள் கட்டப்பட்டிருக்கு! நீயோ கண்ணாடிப் பெட்டிக்குள் தூங்குகிறாய். உன்னை வைக்கிற இடம் இனிமேல் தமிழகத்திற்கு ஒரு தாஜ்மகால். அது தமிழர்களின் தாஜ்மகால் உலக அதிசயத்தில் இனி இதுவும் ஒன்று காரணம் கடவுள் மனிதனாகப் பிறந்த அவதாரங்களைக் கொண்டாடுகிறோம். மனிதன் கடவுளாக மாறிய அவதாரத்தை இப்போது பார்த்துப் பரவசமடைகிறோம்!. நாங்கள் கடவுளிடம் கேட்பது ஒன்றுதான். வீரசாகசங்கள் செய்யும் எந்தக் கடவுளும் இனி எங்களுக்கு வேண்டாம். ஒரே ஒரு விஜயகாந்தைக் கொடு அது போதும்! எங்களுக்கு.. போய் வா விஜி கண்ணீரோடு நான் கையசைக்கிறேன்….

இப்படிக்கு

முன்னாள் மாணவன்

உன் கல்லறையில்

“ஏழைகளின் இதயம்
இங்கு உறங்குகிறது”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES