16

Mar

2023

சிலையும் நீயே சிற்பியும் நீயே…

கண்ணை இழந்தபின் ஒருவன் தன்னை உணர்ந்தால் என்ன பயன்? என்பது போல் அப்பா நீங்கள் இருக்கும்வரை உணராமல் நினைவைச் சுமந்து கொண்டு அப்பா இல்லாத அனாதையாக ஒராண்டினை நிறைவு செய்கிறேன். ஆடை இருக்கும்போது அதனை அலட்சியமாக அணிந்திருப்போம். அது அவிழ்ந்து விழும்போதுதான் அதனை உணர முடியும். கையால் பொத்துவோம் யாரும் கண்டுவிடாதபடி ஓடி ஒளிவோம். மானம் இழப்போம் மரியாதை துறப்போம் பிறர் அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பிறர் நம்மை நோக்கும் பிண்டமாக வாழ்வோம். அதுபோல் தான் அப்பா இருக்கும் வரை அவரது அன்பை அலட்சியமாக மதித்துவிட்டு அப்பா இறந்ததும் அழுவதும், புரள்வதும் அனாதையாகத் துடிப்பதும் என்னைப் போன்ற ஏமாளிகளுக்கு எப்போது புரியபோகிறது?.

அப்பா “எங்கு போனாலும் சொல்லி விட்டுப்போ” என்று சொல்வீர்களே! இப்போது நீங்கள் ஏன் சொல்லாமலே சென்று வீட்டீர்களே?. நான் தாங்கிக் கொள்ள மாட்டேன் என்று தயங்கி விட்டீர்களோ? ஆனாலும் நீங்கள் வருவீர்கள் என்று வராத உங்களை எதிர்பார்த்து விழிகளை நனைத்துக் கொண்டு விரக்தியில் இருக்கிறேன்.

சத்தம் போடாதே செய்தி கேட்கவில்லை! புழுதியில் விளையாடாதே சட்டை அழுக்காகி விடும். பெண்களிடம் தேவையில்லாமல் பேசாதே, அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிடும். இந்த கலரில் சட்டை போடாதே அது நல்லாயில்லை என அடிக்கடி எனக்கு புத்திமதி சொல்கிறீர்களா? மட்டம் தட்டுகிறீர்களா? எனத் தெரியாமல் அடிக்கடி உங்களை முறைத்துக் கொள்வேன். மனத்தால் பகைத்துக் கொள்வேன். ஆனால் அப்பா அத்தனை பாசத்தையும் மனதில் புதைத்துக் கொண்டு எனக்கு வில்லனாகவே நடித்து நடித்து என்னைக் கதாநாயகனாக மாற்றிவிட்டீர்கள். கதாநாயகனாக நான் வெற்றியுடன் திரும்பும்போது எனக்குள் வெற்றிடம் இருக்கிறது அப்பா என் பின்னால் நீங்கள் இல்லையே!.

நான் உறங்கிய பிறகு பிள்ளை சாப்பிட்டானா? என்று பிரியமுடன் அம்மாவிடம் கேட்பீர்களே! நான் இப்போது விழித்து இருக்கிறேன். நீங்கள் நிரந்தரமாகத் தூங்கி விட்டீர்களே! நான் எப்படி அப்பா தாங்கிக் கொள்வேன். ஒருமுறை உங்கள் தோளில் ஏற்றி வைத்து தேரில் இருக்கும் சாமியைப் பார்க்கச் சொன்னீர்களே இல்லாத சாமியை எப்படிப் பார்ப்பது? ஆனால் இப்போது புரிகிறது. சாமியின் தோளிலிருந்து தான் சப்பரத்தை பார்த்தேன் என்று….

அப்பா உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உங்களைப் போல் யாருப்பா? பத்துமாதம் அம்மா சுமந்தார்கள் எல்லோருக்கும் தெரியும்படியாக… ஆனால் நான் பக்குவமடையும் வரை என்னை நெஞ்சில் சுமந்தவர் நீங்களல்லவா! எனக்கு என்ன துன்பம் வந்தாலும் உடனே ஓடி வருவீர்களே இப்போது கண்ணீரோடு நிற்கிறேன். ஏன் கல்லறையை விட்டு வரவில்லை அப்பா நான் எதற்காகவும் அழுததில்லை நீங்கள் இருக்கும் வரை ஆனால் இப்போது அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

நீங்கள் இருக்கும் வரை உறவுகள் அனைத்தும் பிடிக்கும். நீங்கள் போன பிறகு அன்பு செய்வது போல் நடிக்கும் உறவுகள் என்பது வரவுகள் இருக்கும் வரை தானே! நீங்கள் இறக்கும் போது அனைவரும் ஆறுதல் சொல்ல வந்தார்கள் அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட மாறுதல்கள் சரி எல்லாம் சந்தர்ப்ப வாதிகள் தானே! இதனையெல்லாம் நீங்கள் பார்க்காமலேயே கண்மூடியது காலத்தின் கட்டாயம்.

அப்பா இறந்தபிறகு தான் நான் அனாதை என்பது புரிகிறது. நீங்கள் இருக்கும் வரை நல்லது கெட்டதற்கு எல்லாம் அனாதையில்லம் சென்று உணவு, உடை பொருள் கொடுத்துவிட்டு வருவோம் என்பீர்களே! இப்போது நானே அனாதையாக! யார் ஆறுதலாக?…

பரமசிவன் கழுத்தில் கிடக்கும் பாம்பாக இருந்தேன் அந்த பரமசிவனே மறைந்தபிறகு பாம்புக்கு எங்கே மதிப்பு? நீங்கள் இருக்கும்வரை இன்னார் மகனென்றால் எனக்கு ஒரு மதிப்பு! உங்களுக்கு கொள்ளி வைத்து நன்றிகடன் கழித்திருக்க வேண்டும். ஆனால் துறவி என்று தூர விலகி விட்டேன். துறவி என்பதற்காக இல்லை அப்பா நான் எப்படி தெய்வத்தை தீயில் வைக்க முடியும்? எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மண்ணைத் தோண்டி வைரத்தை எடுப்பார்கள் என்று ஆனால் உங்கள் இறப்பு அன்றுதான் மண்ணைத் தோண்டி பொன்னைப் புதைத்தேன்.

உங்களைப் போன்று அன்பு செய்தவர்களை எல்லாம் அப்பா இடத்தில் வைத்து ஆறுதல் அடைய நினைத்தேன். ஆனால் அவர்கள் எல்லாம் என்மேல் கோபமும் வெறுப்பும் ஏற்படும்போது வீதிக்கு இழுத்து விமர்சித்து அசிங்கப் படுத்திவிட்டார்கள். இப்போது புரிகிறது அப்பாவுக்கு நிகர் இல்லாத தெய்வத்தைச் சொல்வார்கள் ஆனால் மண்ணில் உங்களுக்கு நிகரான மனிதர்கள் இல்லை.

அப்பா நீங்கள் ஒரு நல்லாசிரியர் அது நீங்கள் பணிபுரிந்த பட்டி தொட்டியெல்லாம் இன்னும் பறைசாற்றுகிறது. எனவேதான் இந்த அரசு எனக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் வீரமரணம் அடைந்த பிறகு அவர்களுக்கு உரிய பதக்கத்தையும், பட்டத்தையும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் கொடுப்பார்களாம். அந்த நினைவுகளோடு தான் நான் நல்லாசிரியர் பட்டம் வாங்கும்போது எனக்குள் எழுந்தது.

அப்போது உங்கள் மடியில் நான், உங்கள் கரத்தில் நான் உங்கள் கரம்பிடித்துக் கொண்டு நான் உங்கள் பக்கத்தில் நான் இப்போது போட்டோக்களில் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இப்போது கல்லறையில் மட்டும் அழுது கொண்டு இருக்கிறேன். நீங்கள் வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். வரமாட்டீர்கள் என்ற நிதர்சன உண்மையை யாரும் கூற வேண்டாம் ஏனென்றால் அதனைத் தாங்குவதற்கு மனமில்லை, வடிப்பதற்கு கண்ணீர் இல்லை எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டேன். இதயமே இடறி மண்ணுக்குள் மறைந்து விட்டது. அப்பா இப்பிறவியில் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் நீங்கள் ஆனால் அதனை முழுவதும் அனுபவிக்காமல் முடிந்துவிட்டது. இந்த வாழ்க்கை இனி ஒரு பிறவி இருந்தால் உங்களுக்கு மகனாகப் பிறந்து உங்கள் அன்பை முழுவதும் சுவைக்க வேண்டும். ஏனென்றால் என் சிலையும் நீங்களே! என்னைச் செதுக்கிய சிற்பியும் நீங்களே!

“நிச்சயம் மழை வரும் – என்மீதும்
சில துளிகள் விழும்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES