10

Nov

2023

தீபவலி…

அன்புள்ள…

யாருக்கு எழுத வேண்டும்? என்று கூடத்தெரியாத இரண்டாம் வகுப்பு மாணவி மானசா எழுதுகிறேன் இன்று நான் பள்ளிக்குப் போகவில்லை. ஏனென்றால் எல்லா மாணவர்களும் தீபாவளியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். எல்லோருமே எனக்கு புதிய ஆடை எடுத்தாச்சு என்று புத்துணர்ச்சியோடு பேசுகிறார்கள். நான் செத்த உணர்ச்சியோடு சிலேட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். எனக்கு புத்தாடை வாங்கவும் இல்லை வாங்கித்தர அப்பனும் இல்லை.

எங்க டீச்சர் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடி மகிழ்ந்தோம் என்று சிலாகித்துச் சொன்னார்கள். கூட்டுக் குடும்பமாய் குடியிருந்தோம் என்றார்கள். நானோ தனிக் குடும்பத்தில் கூட இல்லை தனியாக ஒரு குடும்பத்தில் வாழுகிறேன். எங்கள் அப்பா யாரோடவோ வாழ்கிறாராம். எதிர் வீட்டுக் கிழவி சொல்வாள். எங்கம்மா யாரோடோ பேசிக் கொண்டிருக்கிறாள். அவரை அண்ணன் என்று சொல்லுவாள். எங்கள் டீச்சர் அவர்கள் வீட்டில் காலையிலே எழுந்து குளித்து முடித்து பட்டாடை அணிந்து குடும்பமே பட்டாசு வெடிக்குமாம். நான் குடும்பமே இல்லாதவள் அந்த கதையை கேட்டு என் குட்டி நெஞ்சு தான் வெடித்தது கூடப்பிறந்தது கூட எதுவுமில்லை

நானும் காலையிலே எழுந்து விடுவேன். என் அம்மா எழுப்பி விடுவாள். பாத்திரங்களையெல்லாம் தேய்ப்பதற்கு! அம்மா என்ன செய்வாள்! அவள் ஒரு அனாதை. ஆதரவாய் இருப்பதாய் காட்டிக் கொண்ட அத்தனை ஆண்களிடத்திலும் ஏமாந்து போயிருக்கிறாள். சில நேரங்களில் கொழு என்று பிடித்தது முள்ளாய் குத்தி முனங்க வைத்திருக்கிறது. சிலரை வீட்டுக்குள் விட மறுத்ததால் எங்கள் அம்மாவை வேசி என்று அவர்கள் வீதியில் சொல்லிவிட்டுப் போவார்கள். இதனால் இந்தச் சமுதாயம் எங்களைச் சாக்கடையாகத்தான் பார்க்கும். எனது அம்மாவிற்கு என் மீது பாசம் அதிகம் தான். ஆனால் வறுமையில் இருக்கும் தாயின் அன்பை எதை வைத்துப் பிள்ளைக்குப் புரிய வைப்பது!. அவள் நினைப்பதெல்லாம் கானல் நீராகும். அவள் பிள்ளை கேட்பதெல்லாம் ஏமாற்றமாகும். பிறந்தோம்! வளர்ந்தோம்! பிழையென்ன செய்தோம்? என்றுதான் இங்கு பல பிழைப்பு நடைபெறுகிறது.

எல்லோரும் புத்தாடையைப்பற்றி பேசுகிறார்கள் பக்கத்து வீட்டில் கொண்டு வந்து காட்டி மகிழ்கிறார்கள். எனக்குப் புத்தாடை கிடையாது. ஒத்த ஆடைதான் உண்டு. அதுவும் எங்கம்மா வீட்டு வேலைக்குப் போன இடத்தில் இருக்கும் பாப்பாவுக்கு சிறிதாக இருக்கிறது என்று எனக்காகக் கொடுத்தது. இதுவரை எனக்கென்று ஆண்டவன் எந்த கடையிலும் ஆடை வைக்கவில்லை எங்கம்மாவும் வாங்கவில்லை.

நான் பள்ளிக்குப் போகும் பாதையில் ஒரு ஆங்கிலப் பள்ளி அங்கேயும் நிறையப் பிள்ளைகள் படிக்கிறது. ஆனால் காசு கொடுத்துப் படிக்கிறார்களாம். ஆனால் எங்கம்மாவிடம் மட்டும் கொடுப்பதற்கே காசு இல்லை. எனக்குப் பள்ளிக்கூடம் ரொம்பப் பிடிக்கும். காரணம் இந்தச் சென்மத்தில் முட்டையோடு யாரு எனக்கு சோறு போடுவாங்க? எங்க பள்ளி எனக்குப் போடுது. எங்கள் ஆயா அம்மாதான். எனக்குச் சிரிச்சுக்கிட்டே சோறு போடுவாங்க. அவங்க சமையலைத்தான் நான் அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறேன். எங்க அம்மாவும் நல்லா சமைப்பாங்க! ஆனா நான் சாப்பிட்டது இல்ல!. அவங்க வேலை பார்க்கிற வீட்டில சமைப்பாங்க. எங்க வீட்டில சமைக்கிறதுக்கு எதுவுமே இல்லை. அதனால அவங்களால சமைக்க முடியல.

எங்க எதித்த வீட்டில ஒரு ஆன்டி இருக்கிறாங்க அவங்களும் என்னை மாதிரித்தான் டிரெஸ் போட்டிருக்காங்க அவங்களுக்கும் அங்கங்க கிழிஞ்சிருக்கும். ஆனா அவங்க வசதியானவங்க வெளிநாட்டில வேலை செஞ்சவங்க என்னம்மா இப்படி கிழிஞ்சிருக்குனு? கேட்டா! என் வாயை எங்கம்மா பொத்திருவாங்க. அவங்க ஸ்டைலா போட்டுருக்காங்கனு சொல்லுவாங்க.

எங்கம்மாவைத் தேடி எங்கப்பா இரண்டு நாளைக்கு முந்தி வந்தாரு. பாசத்திற்காக அல்ல பணத்திற்காக.. அரசு கொடுத்த 1000 ரூபாயை அரட்டி வாங்கிட்டுப்போக. இந்த அரசாங்கம் 1000ரூபாய் கொடுக்கலைன்னா அன்றைக்கு அவங்க சண்டை போட்டிருக்க மாட்டாங்க. எங்கம்மா அடி இல்லாமலாவது இருந்து இருப்பாங்க. எங்கம்மா ஏன் அடிவாங்குனாங்க? அந்தக் காச தீபாவளி கொண்டாடலாம்னு நினைச்சாங்க எங்கப்பா குடிக்கறதுக்காகக் கேட்டாங்க. அதனால எங்கம்மா குடிக்கத் தரமாட்டேனாங்க. எங்கப்பா அடிக்கத் தயாராகிட்டாங்க பிறகு சண்டை, அழுகை, ஏச்சு, பேச்சு இதுதான் எப்போதும் எங்க வீட்டில் கேட்கும் தேசிய கீதம். தெருவே வேடிக்கை பார்க்கும். எனக்கு வெக்கமா இருக்காது பழகிப்போச்சு.

பள்ளிக்கூடத்தில் எனக்கு ரொம்ப பிரண்ட்ஸ் உண்டு. நாங்க எல்லோருமே குடிகாரன் பெத்த பிள்ளைங்க. எங்க உடையில உள்ள ஓட்டையிலே எங்க உடம்பு அங்கங்கே எட்டிப்பார்க்கும் பட்டன் ஊக்கி எல்லாம் நாங்க பாத்ததே இல்ல. ஊக்குதான் எங்களுக்கு உதவி செய்யும் அதுவும் அவ்வப்போது குத்திக்காட்டும் எங்கப்பாவைப் போல! இந்தச் சமுதாயத்தைப்போல!

நான் யாரைக் கேட்டு கருவானேன்? எதற்காக உருவானேன்?. யாரோ இச்சையைத் தீர்க்கிற எச்சத்தில் பிறந்த நான் இன்று பிச்சைக்காரி போல் திரியிறேன். என்னைப் போல குழந்தைகள் வறுமையில் வாட எங்க தெருவில் இருக்கிற டாஸ்மாக்தான் காரணம் அப்பனுக எல்லாம் உழைக்கிறது இல்ல ஆத்தாள நிம்மதியா இருக்க விடுறது இல்ல. யாரோ ஒரு நரகாசுரனைக் கொன்று அதனால தீபாவளி கொண்டாடுறோம்னு டீச்சர் சொன்னாங்க. அந்த வீரன் வரணும் இந்த டாஸ்மாக்கை உடைக்கணும். எங்கப்பாவை எல்லாம் அடிக்கணும் அப்பத்தான் நான் எல்லாம் தீபாவளி கொண்டாட முடியும்.!

எல்லோரும் புதுத்துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாங்க கடையைக் கூட பார்த்ததில்ல. அங்க பொம்மைக்குக் கூட புடவை கட்டுவாங்களாம். ஆனா நாங்க உயிரோடு இருக்கும்போதே அம்மணாத் திரியுறோம். ஒரு நாள் எங்க பெரியம்மா இறந்துருச்சினு போயிருந்தோம். அப்போ புதுப்புது சேலையாய் அவங்க மேல போட்டிருந்தாங்க நானும் எங்கம்மாட்ட கேட்டேன். நானும் செத்தா எல்லோரும் புதுச்சட்டை போடுவாங்களோ அம்மானு? கேட்டேன். எங்கம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு கதறி அழுதாங்க. நான் செத்தா தான் புது டிரெஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

வெடி சத்தம் கேட்கக் கூடாதுனு வீட்டுக்குள்ள வரச்சொன்னா! அதப்பாத்து நான் ஏங்கிறுவேன்னு அம்மா நினைக்கிறாங்க. சத்தம் கேட்கிறது குழந்தைகள் சிரிக்கிறது எல்லாம் கேட்குது நான் மட்டும் அமைதியா வீட்ல தெருவில் கிடந்த சோடா டப்பியோட விளையாட்டு. எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்னு பள்ளிக்கூடத்தில் சொன்னாங்க. பள்ளி லீவுனு சொன்னாங்க எல்லோரும் சந்தோசப்பட்டாங்க. நான் படல. ஒன்று மட்டும் பட்டது நான் பட்டினி! சோறு கிடைக்காது. எப்படிச் சந்தோசம் வரும்!

எங்கள் பக்கத்துல உள்ள பள்ளியிலே பிள்ளைங்கள்லாம் சேர்ந்து என்போல் பிள்ளைகளுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுத்தாங்களாம். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு நானும் போவேன். அப்போ எனக்கு ஒரு டிரெஸ் கிடைக்கும் இன்னும் நாலு வருசம் இருக்கு. அதுவரைக்கும் இந்த டிரெசை கிழிக்காம போட்டுக்குவேன். எம்மா பசிக்கிதுனு கேட்கணும்போல தோனுச்சி! எதுவும் கிடைக்காது! கேட்கல. ஒத்த டிரெஸ்சும் நேத்துப் பெய்த மழையில நனைஞ்சு போச்சு. இப்போ நான் நிர்வாணமா! ஆனா நாளைக்குத் தீபாவளி.! நல்லது நடக்கும்!

இப்படிக்கு மானசா.

(இப்படி ஏதாவது சத்தம் கேட்கிறதா? வீட்டை விட்டு வெளியில வாங்க! கேட்கும். ஆனால் அவர்கள் கேட்க மாட்டார்கள்? கேட்கா விட்டாலும் கொடுங்கள் அது அவர்களுக்குத் தீபாவளியோ! இல்லையோ உங்கள் தீபாவளி உயிருள்ளதாகட்டும்!)

“கொடுக்காமல் அன்பை
வெளிப்படுத்த முடியாது
கொடுத்தாலும் அன்பின்
எல்லைத் தொட முடியாது
அணைத்துக் கொள்வோம்.”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES