18

Nov

2023

நீங்கள் உப்பாயிருங்கள்…

நீங்கள் உப்பாயிருங்கள் இந்த வார்த்தை விவிலியத்தில் உண்டு. இயேசு மகான் மக்களைப் பார்த்து தாங்கள் வாழ்க்கை நெறிமுறைகளில் ஒரே வார்த்தையில் மக்களுக்கு உணர்த்துவது நீங்கள் உப்பாயிருங்கள் என்பது தான். இதனால் இந்த வார்த்தை ஆலயங்களில் அவ்வப்போது ஒலிக்கின்ற வார்த்தைதான் பல குருவானவர்கள் பலவிதக் கருத்துக்களை மக்கள் மனங்களில் பரவி விட்டிருக்கிறார்கள். ஆனால் அருள்நாதர் இயேசு சொன்ன வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கிறது. அதைக் காது உள்ளவர்கள் கவனமாய் கேட்பார்கள்.

நீங்கள் உப்பாயிருங்கள்! சுவைகளில் முதன்மையானது அறுசுவை. அவற்றில் ஒன்று உவர்ப்பு. இதனை கொடுப்பது உப்பு இவற்றில் இனிப்பு என்றால் விழுங்கிவிடுவார்கள். கசப்பு என்றால் துப்பிவிடுவார்கள் உரைப்பைச் சமாளிப்பார்கள். ஆனால் உப்பைத் தேவைப்படும்போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவார்கள். எனவே உப்பாயிருங்கள்!

நீங்கள் மனிதர்களுக்கு உப்பாயிருங்கள்! யாரும் உங்களை விழுங்கிவிடாதபடி யாரும் உங்களைத் துப்பிவிடாதபடித் தேவைப்படும்போது தேவையான அளவு உங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு நீங்கள் உப்பாயிருங்கள். உப்பு இணையும் வரை எந்தச் சுவையும் இல்லாமல் மண்ணுபோல இருப்பதைக் கூட ஏன்? துப்பிவிட வேண்டும்! என்று நினைப்பதைக் கூட உப்பு இணைந்த பிறகு சுவையான பொருட்களாய் மாறும். அதுபோல இந்த உலகில் பயனற்றவர்கள் புறக்கணிக்கப் பட்டவர்கள் எல்லோரும் உங்களுடன் இணைந்த பிறகு அவர்கள் யாவருக்கும் சுவையுள்ள மக்களாக மாற நீங்கள் உப்பாயிருங்கள்.!

உப்பு தனியாக உண்ண முடியாது. ஆனால் நாம் சுவையாக உண்ணக்கூடிய அத்தனைப் பொருட்களிலும் மறைந்து இருந்து அனைத்திற்கும் சுவை கொடுக்கும். அதுபோல் அனைத்துச் செயல்களிலும் நான் தான் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அனைத்து வெற்றிகளிலும் அனைவரது வெற்றிகளிலும் நீங்கள் மறைந்து இருக்கும் உப்பாய் இருங்கள்.

உப்பு எளிதில் கிடைக்கின்ற பொருளாக இருக்கும். அதே போல் ஊறுகாய் போன்ற பொருட்களிலே அதிகமாக உப்பைப்போட்டு ஊற வைத்திருப்பார்கள் காரணம் அது கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக. அதுபோல யாவரும் உங்களை எளிதில் அணுகும்படியும் உங்களோடு இருப்பவர்கள் யாரும் கெட்டுப்போகாத படி பார்த்துக் கொள்ளும் உப்பாய் இருங்கள். பிணங்களைப் புதைக்கும்போது அவற்றிற்குள் அதிகமான உப்புகளைப் போட்டுப் புதைப்பார்கள். ஏனென்றால் பயனற்ற, நாற்றமடிக்கின்ற பொருட்களை உப்பு அழிக்க வேண்டும் என்பதற்காக. அதே போல் இந்தச் சமுதாயத்தை நாறடிக்கிற பயனற்ற அத்தனையையும் அழிக்கின்ற உப்பாய் இருங்கள்.

விருந்து நேரங்களில் முதலில் உப்பு வைப்பார்கள். ஆனால் அவற்றை யாரும் பெரிதாக எண்ணமாட்டார்கள். ஆனால் வைக்கப்படுகின்ற அத்தனை உணவுப் பொருட்களிலும் சுவை குறையும்போது அதில் கரைந்து அவைகளுக்குச் சுவை ஊட்டி விருந்தை மகிழ்வாக்குவார்கள். அதே போல ஒரு குழுவில் முக்கியமில்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அத்தனைபேரையும் முக்கியமானவர்களாக மாற்றி அமைப்பார்கள் அத்தகைய உப்பாக இருங்கள்.!

இன்று உலகம் தடுமாறுவது மக்களிடையே காணப்படுகின்ற உறவுச்சிக்கலில் தான், காரணம் நமது பெற்றோர்களிடத்தில், குழந்தைகளிடத்தில், கணவன் மனைவியிடத்தில், நண்பர்களிடத்தில் இனிமையாகப் பழக வேண்டும். இனிப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். அதனால் அன்பினால் அவர்களை அடிமையாக்க அவர்களுக்கு நாம் அடிமையாகிவிடுகிறோம். இனிப்பாக இருக்க ஆசைப்படுகிறோம். அதனால் அவர்கள் நம்மை விழுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடத்தில் நீங்கள் உப்பாய் இருங்கள்!

அவர்களுக்கு நீங்கள் இனிப்பாய் இருக்க நினைக்க, நினைக்க அவர்கள் உங்களை உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் உங்களால் முடியாதபோது நீங்கள் உங்கள் இயலாமைச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். உங்களைக் கசப்பாகக் கருதி துப்பிவிடுவார்கள். ஆகவே நீங்கள் எப்போதும் உப்பாகவே இருங்கள் தேவைப்படும்போது மட்டும் தேவையான அளவு உங்களைக் கொடுக்கும் உப்பாக இருங்கள். அது யாராய் இருந்தாலும் சரி.

உப்பை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் அதன்பின் அதனை விட்டு விடுவார்கள். ஆகவே யாருக்கும் அளவுக்கு அதிகமாக உங்களைக் கொடுத்துவிடாதபடி அளவோடு இருக்கும் உப்பாயிருங்கள்!

உடலில் வியாதி உள்ளவர்கள் உடலில் கொழுப்பு, இரத்தக் கொதிப்பு உடையவர்களை எல்லாம் நீங்கள் உப்பைத் தொடக்கூடாது என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்துவிடுவார்கள். அதே போல் சமுதாயத்திற்கு வியாதியாய் இருப்பவர்கள், சமுதாயத்தால் கொழுத்துப் போனவர்கள் உங்களைத் தொட முடியாதபடி தொட்டால் அவர்கள் அழிந்து போகும்படி நீங்கள் உலகிற்கு உப்பாய் இருங்கள்.

எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சர்க்கரை வியாதி இருக்காது. ஏதோ ஒரு கட்டத்தில் உடலுழைப்பை மறந்தவர்கள் மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்களுக்கே சர்க்கரை வியாதி வரும். அது போல உழைப்பவர்கள் எப்போதும் உங்களைப் பயன்படுத்தவும் உழைக்காதவர்கள் உங்களைத் தொடமுடியாத படியும் எப்போதும் இருக்கும் உலகின் உப்பாயிருங்கள்!

உப்பு அதிகமாகி உப்புச் சேர்க்கக் கூடாது எனச் சொல்பவர்களிடத்திலெல்லாம் இனிப்பும் சேர்க்கக்கூடாது என்று சொல்லி விடுவார்கள் காரணம் இனிப்பை அதிகமாக உண்டிருப்பார்கள்! எனவே அதையும் தொட முடியாத அளவு செய்து விடுவார்கள். அதே போல இந்த உலகில் அன்பைச் சொல்லி உறவைச் சொல்லி தனக்கு இனிப்பாய் இருக்க வேண்டுமென்று இரக்கம் உள்ளவர்களாக இருந்து தன்னையே கொடுத்த அத்தனை உள்ளங்களையும், அதிகாரம், பணம், ஆணவம், ஆணாதிக்கத்தால் விழுங்கிய அத்தனை பேரையும் இனி எந்த இனிப்பையும் உண்ணவிடாமல் உண்டால் மரணம்தான் என்று உலகிற்குச் சவுக்கடி கொடுக்கும் உப்பாய் நீங்கள் இருங்கள்!

சிலருடைய மரணத்தைப்பற்றிப் பேசும்போது அவனுக்கு சர்க்கரை வியாதி உண்டு. ஆனாலும் வரம்பு மீறி எந்தக் கட்டுப்பாடும் இன்றி சாப்பிட்டுக் கொண்டே அதாவது வாயடக்கம் இல்லாமல் இருந்ததால் இன்று அடக்கம் பண்ணப்படுகிறான் தன்னுடைய வரம்புக்கு மீறி சமுதாயத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைவரையும் அடக்கம் பண்ணும் உப்பாயிருங்கள்!

உப்பு வெள்ளையாக இருக்கும் மற்றவரோடு இணையும் போது மாயமாய் மறையும் பிறரோடு இணைந்து மறையும் வரை தூயதாய் இருக்கும் உப்பாய் இருங்கள். திரவமாய்த் தோன்றி, திடமாய் மாறி, வாயுவாய் அழியும் தனக்கென்று அடையாளத்தைத் தேடாத உப்பாய் இருங்கள்.

உப்பு இருக்கும்போது பயனற்றது தன்னைக் கரைக்கும்போது புகழ்பெற்றது. தன்னையே கரைத்து பிறருக்குப் புகழ் சேர்க்கும் உப்பாய் நீங்கள் இருங்கள்!. அப்போ நான்?… நானும் தான்!…

“உப்பைச் சாப்பிட
முடியாது – ஆனால்
உப்பு இல்லாமலும்
சாப்பிட முடியாது”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES